டெல்லி அருகேயுள்ள குர்காவ்ன் நகரில் பாகிஸ்தான் குழுவினரின் நாடகத்தை நிறுத்த முயன்ற சிவசேனா தொண்டர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாகிஸ்தான் பாடகர் உஸ்தாத் குலாம் அலி மும்பையில் இசைக் கச்சேரி நடத்த ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. ஆனால் சிவசேனா வின் எச்சரிக்கை காரணமாக இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கசூரியின் புத்தக வெளியீட்டு விழா அண்மையில் மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்த எழுத்தாளர் சுதீந்திர குல்கர்னி மீது சிவசேனா தொண்டர்கள் கருப்பு மையை தெளித்தனர்.
இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்து சில நாட்களுக்கு முன்பு மும்பையில் உள்ள பிசிசிஐ அலுவலகத்தை சிவசேனா தொண்டர்கள் முற்றுகையிட்டனர்.
இந்நிலையில் டெல்லி அருகே யுள்ள குர்காவ்ன் நகரில் பாகிஸ் தானின் லாகூர் நகரைச் சேர்ந்த குழுவினரின் நாடகம் நேற்று நடை பெற்றது. அப்போது அரங்கத்துக் குள் அமர்ந்திருந்த சிவசேனா தொண்டர்கள் திடீரென எழுந்து மேடையில் ஏறி கோஷமிட்டனர். இதுகுறித்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த குர்காவ்ன் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீ ஸார் விரைந்து வந்து சிவசேனா தொண்டர்களை அப்புறப்படுத் தினர். போராட்டத்தை முன்னின்று நடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
உள்ளூர் சிவசேனா தலைவர்கள் கூறியபோது, இந்தியாவில் பாகிஸ் தான் குழுவினர், தனிநபர் எங்கு நிகழ்ச்சி நடத்தினாலும் அதை தடுத்து நிறுத்துவோம் என்று தெரிவித்தனர்.