சத்தீஸ்கர் மாநிலத்தின் வனப்பகுதி ஒன்றில் அதிரடி படையினருடன் நடந்த மோதலில் மாவோயிஸ்டு தளபதி சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பீஜப்பூர் மாவட்டத்தில் இன்று மதியம் ஏற்பட்ட இச்சம்பவம் குறித்து பாஸ்டர் சரகத்தின் காவல்துறைத் தலைவர் பி.சுந்தர்ராஜ் கூறியதாவது:
மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்த கிடைத்த தகவல்களை அடிப்படையில் கோப்ரா அதிரடிப்படையினர் அப்பகுதிக்கு விரைந்தனர். மாவட்ட ரிசர்வ் காவலர்கள், மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் உயரடுக்கு பிரிவு கோப்ரா அதிரடிப்படையினரும் இணைந்த கூட்டுக்குழுக்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
கங்களூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வனப்பகுதியில் இன்று மதியம் 12.30 மணியளவில் கடும் மோதல் ஏற்பட்டது,
மாவட்ட ரிசர்வ் காவலர் மற்றும் அதிரடிப்படையினரின் ரோந்து குழு ஹக்வா கிராமத்திற்கு அருகிலுள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளை சுற்றி வளைத்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு கடும் துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இதில் மாவோயிஸ்டுகளின் தளபதி அர்ஜுன் சுட்டுக்கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சண்டைக்குப் பின்னர் தப்பிய மற்ற மாவோயிஸ்டுகளைக் கண்டுபிடிக்க அருகிலுள்ள வனப்பகுதிகளுக்கு ஒரு தனிப்படை அனுப்பப்பட்டுள்ளது.
ஒரு துப்பாக்கி மற்றும் அதிக அளவு வெடி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன, மேலும் இப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அண்மையில் பீஜப்பூரின் கங்களூர், மிர்தூர் மற்றும் பைரம்கர் பகுதிகளில் நடந்த பொதுமக்கள் படுகொலைகளில் அர்ஜுன் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இவ்வாறு காவல்துறைத் தலைவர் தெரிவித்தார்.