கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் நாளை கடையடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தைத் தரும் என்பதால் கடையடைப்பு வேண்டாம் என வெள்ளிக்கிழமை முதல்வர் எடியூரப்பா வேண்டுகோள் விடுத்தார்.
மாநிலத்தில் மராட்டிய மேம்பாட்டு வாரியத்திற்கு ரூ .50 கோடி ஒதுக்க கர்நாடக அரசு எடுத்த முடிவுக்கு மாநிலத்தில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.
மாநில அரசின் முடிவுபற்றி கர்நாடகா காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா கூறுகையில், ''கர்நாடகாவில் மராட்டிய மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளதன் மூலம் எடியூரப்பா அரசு பிரித்தாளும் கொள்கையை கடைப்பிடித்துள்ளது.
தேர்தல் நன்மைகளை மட்டுமே மனதில் கொண்டு, எடியூரப்பா இவ்வாறு செய்துள்ளார். அறிவியலற்ற சமுதாயத்திற்கான ஒரு பாதையை அவர் தேர்ந்தெடுத்துள்ளார். இதன்மூலம் சாதி அமைப்புகளை மட்டுமே வளர்க்க முடியும்'' என்று குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து மராட்டிய மேம்பாட்டு வாரியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்புகள் நாளை ( டிசம்பர் 5) மாநிலம் தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய முதல்வர் எடியூரப்பா கூறியதாவது:
எந்தவிதமான கடையடைப்பும் பொதுமக்களைத்தான் பாதிக்கும். மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடிய மாநிலம் தழுவிய கடையடைப்புப் போராட்டம் அவசியமற்றது.
மக்களிடையே பிளவு ஏற்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை. சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் ஒன்றாக இணைந்து வாழ்வதற்கு நான் உறுதியளிக்கிறேன்.
இவ்வாறு எடியூரப்பா தெரிவித்தார்.