அயோத்தியில் இந்திய இஸ்லாமிக் கலாச்சார அறக்கட்டளை சார்பில் கட்டப்படும் புதிய மசூதிக்கு மாநில, மத்திய அரசு சார்பில் உறுப்பினர்களை நியமிக்கக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
கடந்த ஆண்டு நவம்பர் 9-ம் தேதி ராமஜென்ம பூமி பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், சர்ச்சைக்குரிய இடத்தில் ஸ்ரீராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதி வழங்கியது. அதேசமயம், அயோத்தியில் நகர் அருகே தானிப்பூரில் புதிதாக ஓரிடத்தில் 5 ஏக்கர் நிலத்தில் மசூதி கட்டிக்கொள்ளலாம். அதற்குரிய இடத்தை சன்னி வக்பு வாரியத்துக்கு மாநில அரசு ஒதுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதன்படி, அயோத்தியில் 5 ஏக்கர் நிலத்தை வக்பு வாரியத்துக்கு உத்தரப் பிரதேச அரசு ஒதுக்கியது. இந்த இடத்தில் மசூதி மட்டுமல்லாது, கலாச்சார ஆராய்ச்சி மையம் கட்டப்படும். மக்கள் பயன்பாட்டுக்கான நூலகம், மருத்துவமனை, சமுதாய உணவுக்கூடம் கட்டப்படும். இதற்காக இந்திய இஸ்லாமிக் கலாச்சார அறக்கட்டளை உருவாக்கப்படும் என்று சன்னி வக்பு வாரியம் கடந்த ஜூலை 29-ம்தேதி அறிவித்திருந்தது.
இந்நிலையில் சன்னி வக்பு வாரியம் சார்பில் உருவாக்கப்படும் இந்த இந்தியக் கலாச்சார அறக்கட்டளைக்கு மாநில அரசு, மத்திய அரசு சார்பில் உறுப்பினர்களை நியமிக்கக் கோரி இரு வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்கள்.
அந்த மனுவில், “இந்திய இஸ்லாமிக் கலாச்சார அறக்கட்டளை மூலம் கட்டப்படும் மசூதிக்கு ஏராளமானோர் உள்நாடு, வெளிநாடுகளில் இருந்தும் வருவார்கள். இதனால் அறக்கட்டளைக்கு கிடைக்கும் பணத்தை நிர்வகிக்க நம்பிக்கைக்குரிய உறுப்பினர்கள் தேவை.
மேலும், பொதுநலன் கருதி, எந்தவிதமான தவறுகளும் நடக்காமல் தடுத்த மத்திய அரசு சார்பிலும் மாநில அரசு சார்பிலும் உறுப்பினர்கள் இந்த அறக்கட்டளையில் இடம் பெற்று நிர்வகிக்க உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.எப். நாரிமன் அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுவை விசாரிக்காமல் தள்ளுபடி செய்வதாக நீதிபதி அறிவித்தார்.