இந்தியா

இளம்பெண் வேவு பார்ப்பு விவகாரத்தில் புதிய திருப்பம்: மத்திய, மாநில விசாரணைக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண் மனு

செய்திப்பிரிவு

தன்னை குஜராத் போலீஸார் வேவுபார்த்தது தொடர்பாக விசாரிக்க மத்திய, மாநில அரசுகள் அமைத்த விசாரணை ஆணையங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட இளம்பெண் மனு செய்துள்ளார்.

குஜராத் முதல்வர் மோடியின் உத்தரவின் பேரில் இளம்பெண் ஒருவரை காவல்துறை அதிகாரிகள் வேவு பார்த்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் இடையே 2009-ம் ஆண்டு நிகழ்ந்த உரையாடல் பதிவு செய்யப்பட்ட சி.டி.யை இரு செய்தி இணைய தளங்கள் வெளியிட்டன.

இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க கடந்த நவம்பர் மாதம் விசாரணை ஆணையத்தை மாநில அரசு அமைத்தது. அதைத் தொடர்ந்து தானும் விசாரணை ஆணையத்தை அமைக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்தது.

அந்த ஆணையத்திற்கான நீதிபதியை மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 16-ம் தேதிக்குள் நியமிக்கப்போவதாக சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியவை எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, அந்த முடிவை மத்திய அரசு கைவிட்டது.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட இளம்பெண்ணும் அவரது தந்தையும் இணைந்து உச்சநீதி மன்றத்தில் செவ்வாய்க் கிழமை மனு தாக்கல் செய்தனர். மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: மத்திய, மாநில அரசுகளின் விசாரணை ஆணையங்களுக்குத் தடை விதிக்க வேண்டும். கண்ணியத்துடன் வாழ்வதற்கான எனது அடிப்படை உரிமையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்த நிலையில், பாதுகாப்பிற்காக குஜராத் மாநில அரசு மேற்கொண்ட (வேவுபார்க்கும்) நடவடிக்கை, எனக்கு திருப்தியளிக்கிறது. இந்நிலையில், எனது குடும்பத்தின் கவுரவத்தைப் பாதிக்கும் வகையில் சிலர் தவறான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், நான்கு முறை இருப்பிடத்தை மாற்ற வேண்டிய நிலைக்கு நான் தள்ளப்பட்டேன். ஆபாசமான தொலைபேசி அழைப்புகள் வருகின்றன” என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் சர்மா மனு செய்திருப்பதற்கும் சம்பந்தப்பட்ட இளம்பெண் ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.

தான் திருமணம் செய்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருவதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில மகளிர் ஆணையத்தை அணுகியுள்ளதையும், அவை விசாரணை நடத்தி வருவதையும் சம்பந்தப்பட்ட இளம்பெண் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சனா பிரகாஷ் தேசாய், என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. பிரதிவாதிகளின் (மத்திய, மாநில அரசுகள்) கருத்தைக் கேட்காமல் விசாரணை ஆணையங்களுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது. சம்பந்தப்பட்ட இளம்பெண்ணின் பெயரை ஊடகங்கள் வெளியிடக் கூடாது. இந்த மனு தொடர்பாக பதிலளிக்குமாறு அறிவுறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று நீதிபதிகள் தங்களின் உத்தரவில் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT