இந்தியா

அரவிந்த் கேஜ்ரிவால் கைது: கட்கரி தொடர்ந்த அவதூறு வழக்கில் திகார் சிறையில் அடைப்பு

எம்.சண்முகம்

பாஜக முன்னாள் தலைவர் நிதின் கட்கரி தொடர்ந்த அவதூறு வழக்கில், ஜாமீன் பெற பிரமாண பத்திரம் அளிக்க மறுத்த டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கேஜ்ரிவாலை சிறையில் அடைக்க டெல்லி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து உடனடியாக அவரை போலீஸார் கைது செய்தனர்.

அரவிந்த் கேஜ்ரிவால், கடந்த ஜனவரி 31-ம் தேதி, "இந்தியாவின் மோசமான ஊழல் அரசியல்வாதிகள்" பட்டியலை வெளியிட்டார். இந்தப் பட்டியலில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் நிதின் கட்கரி பெயரும் இடம்பெற்றிருந்தது.

கேஜ்ரிவாலின் அறிவிப்பு அரசியலில் தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாகக் கூறி அவர் மீது நிதின் கட்கரி அவதுாறு வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கில், நேரில் ஆஜராகும் படி டெல்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் கோமதி மனோச்சா உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு புதனன்று விசாரணைக்கு வந்தபோது, கேஜ்ரிவால் நேரில் ஆஜரானார். கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க ரூ.10 ஆயிரத்துக்கு இணையான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

கேஜ்ரிவால் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், "எனது கட்சிக்காரர் ஊழலுக்கு எதிரான முன்முயற்சியாக ஊழல்வாதிகளின் பட்டியலை வெளியிட்டார். இதில் எந்தத் தவறும் இல்லை. அவரை எதிர்த்து அரசியல் ரீதியாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் ஜாமீன் பெற பிரமாணப் பத்திரம் எதுவும் தாக்கல் செய்ய மாட்டார். வழக்கில் ஆஜராவதாக உறுதிமொழி அளிக்கத் தயார். இது, கட்சியின் கொள்கை முடிவு" என்று வாதிட்டார். மற்றொரு வழக்கறிஞர் ராகுல் மெஹ்ராவும் இதே கருத்தை தெரிவித்தார்.

இதைக் கேட்ட நீதிபதி கோமதி, "உங்களுக்காக சட்ட நடைமுறையை மாற்றச் சொல்கிறீர்களா? ஜாமீன் வேண்டும் என்றால், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வது சட்ட நடைமுறை. அதில் உங்களுக்கு என்ன சிரமம்? ஆம் ஆத்மி (சாதாரண மனிதன்) என்ற பெயரில் கட்சி நடத்துகிறீர்கள். சாதாரண மனிதன்போல் நடந்து கொள்ள வேண்டியதுதானே? சிறப்புச் சலுகை எப்படி கேட்கிறீர்கள்" என்றார்.

கேஜ்ரிவால் வாதிடும்போது, "நான் எந்தத் தவறும் செய்துவிடவில்லை. பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து ஜாமீன் பெற வேண்டிய அவசியம் இல்லை. நான் சிறை செல்லத் தயார்" என்றார்.

நிதின் கட்கரி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிங்கி ஆனந்த், "சட்டம் அனைவருக் கும் சமமானது. சட்ட நடைமுறை யிலிருந்து விலகி, சிறப்புச் சலுகை கேட்கின்றனர். இதை அனுமதிக்கக் கூடாது" என்று வாதிட்டார்.

அப்போது வாதிட்ட கேஜ்ரிவால், "நான் எனக்கு மட்டும் தனிச் சலுகை கேட்கவில்லை. முன்னுதாரணத்தை ஏற்படுத்த விரும்புகிறோம்" என்றார்.

மாலையில் நீதிமன்றம் மீண்டும் கூடியதும், கேஜ்ரிவாலை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி கோமதி மனோச்சா உத்தரவிட்டார். வழக்கின் அடுத்த விசாரணை வரும் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. உடனே, கேஜ்ரிவாலை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர். வரும் 23-ம் தேதி வரை கேஜ்ரிவால் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT