நாட்டில் உள்ள அனைவருக்கும் கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று அரசாங்கம் சொல்லவே இல்லை என மத்திய சுகாதாரச் செயலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பின்போது ராஜேஷ் பூஷணிடம் கரோனா தடுப்பூசியை எப்போது நாட்டு மக்கள் அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "சில விஷயங்களை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அறிவியல் சார்ந்த விவாகரங்களைப் பற்றி விவாதிக்கும் முன்னர் உண்மை நிலவரத்தை பகுப்பாய்வு செய்வது அவசியம். இதுவரை அரசாங்கம் எப்போதுமே கரோனா தடுப்பூசி நாட்டு மக்கள் அனைவருக்கும் வழங்கப்படும் என்று சொல்லவில்லை.
குறிப்பிட்ட அளவிலான மக்களுக்கு தடுப்பூசியை செலுத்துவதால், தொற்று பரவல் சங்கிலியை உடைக்க முடியும். அதுதான் அரசாங்கத்தின் இலக்கு.
அதேபோல், ஏற்கெனவே கரோனா பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு தடுப்பூசியை வழங்குவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. ஏனெனில் உலகம் முழுவதுமே இது இன்னும் இறுதி செய்யப்படாமல் உள்ளது" என்றார்.
முன்னதாக, கரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதி பெறப்பட்டவுடன் முதலில் முன்கள சுகாதாரப் பணியாளர்கள், காவலர்கள், ராணுவ வீரர்கள், 50 வயதுக்கு மேற்பட்டோர், இணை நோய் கொண்ட 50 வயதுக்கு கீழ் உள்ளோர் என்ற முன்னுரிமையின் படி வழங்கப்படும் என மத்திய அரசு குறிப்பிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.
கரோனா தடுப்பூசிப் பணிகளை பிரதமர் மோடி நேரடியாகப் பார்வயிட்டுத் திரும்பிய நிலையில், மத்திய சுகாதாரச் செயலரின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
இதேபோல், இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் மருத்துவர் பல்ராம் பார்கவாவும், ஒரு குறிப்பிட்ட அளவிலான தேர்வு செய்யப்பட்ட மக்களுக்கு தடுப்பூசியை முதலில் வழங்கினால், வைரஸ் தொற்றுச் சங்கிலி உடைந்துவிடும். அதன்பின்னர் ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் தடுப்பூசி வழங்க வேண்டிய அவசியம் ஏற்படாது எனத் தெரிவித்திருந்தார்.