வேளாண் சட்ட எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் கடந்த 6 நாட்களாக பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தொடர்கிறது. விவசாயிகள் டெல்லியிலும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளிலும் முகாமிட்டு மத்திய அரசை எதிர்த்து வருகின்றனர்.
இந்த சூழலில், அவர்களுக்கு உதவும் வகையில் நெருங்கும் அரசியல் கட்சிகள், 2022-ம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் ஆதாயம் தேட முயல்கின்றனர்.
தற்போது பஞ்சாபில் தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி புரிகிறது. இதன் முக்கிய எதிர்க்கட்சியாக டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி அமைந்துள்ளது. மற்றொரு எதிர்க்கட்சியாக சிரோமணி அகாலி தளமும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளது. இதற்கு காரணமாக அக்கட்சி மத்திய அரசின் விவசாயிகள் சட்டங்கள் மூன்றையும் எதிர்த்திருந்தது. இதனால், இம்மூன்று கட்சிகளுமே விவசாயிகள் போராட்டத்தில் உதவி செய்து பஞ்சாப் தேர்தலுக்காக ஆதாயம் தேடத் துவங்கிவிட்டனர்.
டெல்லியின் காவல் துறை யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இதற்கு உதவும் வகையில் போராட்டத்தில் கைதாகும் விவசாயிகளை டெல்லியின் முக்கிய விளையாட்டு அரங்குகளில் தங்க வைக்க காவல் துறைஆம் ஆத்மி அரசிடம் அனுமதி கேட்டது. இதற்கு முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் விவசாயிகளுக்கு உதவும் வகையில் அரங்குகளில் அனுமதிக்க மறுத்து விட்டார்.
இத்துடன் விவசாயிகளின் போராட்ட முகாம்களுக்கு தனதுகுடிநீர் துறையின் கீழ் தேவையான வசதிகளை செய்து தரவும்உத்தரவிட்டுள்ளார். இதனால், விவசாயிகளுக்கு தங்கிய இடத்திலேயே வேண்டிய அளவிற்கு சமையல் உள்ளிட்ட பயன்பாடுகளுக்காக குடிநீர் வசதி செய்துதரப்படுகிறது. தற்போது டெல்லியில் நடுங்கும் குளிர் நிலவுகிறது.இதில், மேற்புறக் கூரையின்றிஇரவில் தங்கும் விவசாயிகளுக்காக தற்காலிக துணிக்கூரைகளும் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
குளிருக்காக விவசாயிகளுக்கு டெல்லி குடிநீர் துறையின் சார்பில் கம்பளிகளும் இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன. இவர்கள்போராட்டத்தை வலுக்க வைக்கும் வகையில் சமூகவலைதளங்களிலும் ஆம் ஆத்மி கட்சியினர் பல்வேறு வீடியோ மற்றும் புகைப்படங்களை தகவல்களுடன் பதிவேற்றம் செய்து வைரலாக்கி வருகின்றனர். இப்பிரச்சினையில் மத்திய அரசை விமர்சிக்க நேற்று ஒரே நாளில் முதல்வர் கேஜ்ரிவால் தலைமையிலான அரசின் 4 அமைச்சர்கள் பத்திரிகையாளர் சந்திப்பு கூட்டம் நடத்தினர்.
இதனிடையே பஞ்சாப், டெல்லியில் பெரும்பாலான குருத்துவாராக்களை நிர்வகித்து வரும்சிரோமணி அகாலி தளம் கட்சியினரும் விவசாயிகளுக்கு உதவ களம் இறங்கி உள்ளனர். இவர்கள் விவசாயிகள் தங்கவும், அவர்களுக்கு உணவுகளை சமைத்து குருத்துவாராக்கள் மூலமாக விநியோகித்து வருகின்றனர். அவ்வப்போது அகாலி தளம் கட்சித் தலைவர்கள் விவசாயிகளைநேரில் சந்தித்து மருந்துகள் உள்ளிட்ட தேவையான உதவிகளையும் செய்கின்றனர்.
இதுபோல காங்கிரஸாரும் விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். போராட்ட முகாம்களுக்கு அருகிலுள்ள மசூதிகள் மற்றும் தேவாலயங்களில் இருந்து சமைக்கப்பட்ட உணவுகள் விவசாயிகளுக்கு கிடைக்கின்றன. இதன் பின்னணியில் காங்கிரஸ் கட்சியினர் இருந்து உதவுவதாகவும் கருதப்படுகிறது.