கரோனா நோயாளிகளின் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்படுவதால் அவர்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுகிறார்கள் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா நோயாளிகளின் வீடுகளில் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் நோட்டீஸ் ஒட்டப்படுகிறது. இந்த நடைமுறையை எதிர்த்து டெல்லியை சேர்ந்த குஷ் கல்ரா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இம்மனு நீதிபதிகள் அசோக்பூஷண், ஆர்.எஸ். ரெட்டி,எம்.ஆர். ஷா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரதீப் சர்மா ஆஜரானார். அவர் வாதிடும்போது, "கரோனா நோயாளிகளின் பெயர்களை நோட்டீஸ் மூலம் விளம்பரப்படுத்துவது சட்ட விதிகளுக்குஎதிரானது. இதன்காரணமாக நோயாளிகள் ஒதுக்கப்படுகிறார்கள்.நோட்டீஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்" என்று கோரினார்.
மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். அவர் கூறும்போது, "கரோனா நோயாளிகளின் வீடுகளுக்கு வேறு யாரும் செல்லக்கூடாது. வைரஸ் பரவலை தடுக்கவேண்டும் என்ற நோக்கத்துக்காகவே நோட்டீஸ் ஒட்டப்படுகிறது. எனினும், நோட்டீஸ் நடைமுறையால் கரோனா நோயாளி அவமரியாதையை சந்திக்க நேரிடுகிறது என்றால் அந்த நடைமுறையை தவிர்க்கலாம். இந்த விவகாரத்தில் மாநில அரசுகள்தான் முடிவெடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கூறும்போது, "கரோனா நோயாளிகளின் வீடுகளின் முன்பு நோட்டீஸ் ஒட்டப்படுவதால் அவர்கள் மனரீதியாக பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுகிறார்கள். இந்த விவகாரத்தில் மாநில அரசுகள்தான் முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறுவதை ஏற்க முடியாது. இதுதொடர்பாக மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 3-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது" என்று தெரிவித்தனர்.
இந்த வழக்கு கடந்த நவம்பர் 5-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, கரோனா நோயாளிகளின் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்படுவதை தடுக்க புதிய வழிகாட்டு நெறிகளை வெளியிடுவது குறித்து பரிசீலிக்குமாறு நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர். தற்போது எழுத்துப்பூர்வமாக மத்திய அரசு பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். எனவே மத்திய அரசு தரப்பில் புதிய வழிகாட்டு நெறிகள் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி உயர் நீதிமன்ற வழக்கு
உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருக்கும் குஷ் கர்லா இதே விவகாரம் தொடர்பாக டெல்லி அரசுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அப்போது, கரோனா நோயாளிகளின் வீடுகளில் நோட்டீஸ் ஒட்ட மாட்டோம் என்று டெல்லி அரசு உறுதி அளித்தது. உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், "கரோனா நோயாளிகளின் பெயர்களை வெளியிடக்கூடாது. சமூக ஊடகங்களில் தகவல்களை பகிர்ந்து கொள்ளக்கூடாது" என்று டெல்லி அரசுக்கு கண்டிப்புடன் அறிவுரை வழங்கியது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் நோட்டீஸ் நடைமுறையை ரத்து செய்வதற்காக உச்ச நீதிமன்றத்தை குஷ் கர்லா நாடியுள்ளார்.