சாதி மறுப்பு திருமணங்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைக்க உத்தராகண்ட் அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
உத்தராகண்டில் சட்டப்பூர்வமாக பதிவு செய்து சாதி மறுப்பு அல்லது மதம் மாறி திருமணம் செய்துகொள்வோருக்கு அரசு ரூ.50,000 ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. டெஹ்ரி மாவட்டத்தில் மட்டும் 18 ஜோடிகள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன் அடைந்துள்ளதாக சமூக நலத்துறை தெரிவித்திருந்தது. இதையடுத்து, இந்தத் திட்டத்தை நிறுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. சாதி மறுப்பு திருமணங்களுக்கு பணம் வழங்குவதன் மூலம் லவ் ஜிஹாத்தை, உத்தராகண்ட் மாநில அரசு ஊக்கப்படுத்தி வருவதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரிக்க முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் உத்தரவிட்டிரு்தார்.
இதுகுறித்து மாநில நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் மதன் கவுஷிக் கூறும்போது, “இந்தத் திட்டம் 1976-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. 2014-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது இந்தத் தொகை ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. ஆனால் இப்போது மதமாற்ற தடை சட்டம் அமலுக்கு வந்துவிட்டதால், இந்தத் திட்டம் செல்லுபடியாகாது. ஆனாலும் இந்தத் திட்டம் தொடர்பாக சில குழப்பங்கள் உள்ளன. அது விரைவில் சரி செய்யப்படும்” என்றார்.