குஜராத்தில் 5 பேர் உயிரிழக்கக் காரணமான கோவிட் மருத்துவமனை தீ விபத்து தொடர்பாக 3 மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
நவம்பர் 27 -ம் தேதி ராஜ்கோட்டில் உள்ள உதய் சிவானந்த் கோவிட் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 கோவிட் நோய்த்தொற்றாளர்கள் பலியாகினர். இச்சம்பவம் கோவிட் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை பாதுகாப்புகள் குறித்து சர்ச்சையை உருவாக்கியது.
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ .4 லட்சம் இழப்பீடு அறிவித்தார். கோவிட் மருத்துவமனை தீவிபத்து தொடர்பாக மூன்று மருத்துவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ராஜ்கோட் காவல் துணை ஆணையர் மனோகர்சிங் ஜடேஜா கூறியதாவது:
5 பேர் உயிரிழக்கக் காரணமான ராஜ்கோட் கோவிட் மருத்துவமனை தீ விபத்து தொடர்பாக 3 மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள். கோவிட் 19 பரிசோதனை அறிக்கை வந்தவுடன் மேலும் இரண்டு மருத்துவர்கள் கைது செய்யப்படுவார்கள்.
டாக்டர் விஷால் மோத்தா, பிரகாஷ் மோத்தா மற்றும் டாக்டர் தேஜாஸ் கர்மதா ஆகிய மூன்று மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்டவுடனேயே யாரும் வெளியேற முடியாத நிலைதான் அங்கு உள்ளது. காரணம் மருத்துவமனையில் ஐசியூ சிகிச்சைப் பிரிவிற்கு அருகில் வெளியேறும் வாயில்கள் இல்லை, மருத்துவமனை ஊழியர்களுக்கும் தீயணைப்பு பாதுகாப்புப் பயிற்சி வழங்கப்படவில்லை. இதுதான் கட்டிடத்தில் தீ பிடித்தவுடன் கரோனா நோய்த்தொற்றாளர்கள் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்துள்ளது.
இவ்வாறு காவல் துணை ஆணையர் தெரிவித்தார்.