மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள். (கோப்புப் படம்) 
இந்தியா

வேளாண் சட்டங்கள் தொடர்பான விவாதத்தின் போது மாநிலங்களவை ‘ஆடியோ' பாதித்தது ஏன்?- ஆர்டிஐ கேள்விக்கு மத்திய பொதுப் பணித் துறை விளக்கம்

செய்திப்பிரிவு

‘‘மாநிலங்களவையில் வேளாண் சட்டங்கள் மீதான விவாதத்தின் போது, எம்.பி.க்கள் மைக்ரோபோன்களை சேதப்படுத்தியதால் ஆடியோ சேவை பாதிக்கப்பட்டது’’ என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

விவசாயிகளுக்கான உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிகம் (மேம்படுத்துதல் மற்றும் வசதிகளை ஏற்படுத்தித் தருதல்) சட்டம், விவசாயிகளுக்கான (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம், வேளாண் சேவைகள் ஒப்பந்த சட்டம் ஆகியவை மக்களவையில் கடந்த செப்டம்பர் 17-ம் தேதி நிறைவேற்றப்பட்டன.

இந்த சட்டங்கள் கடந்த செப்டம்பர் 20-ம் தேதி மாநிலங்களவையில் கடும் அமளிக்கு நடுவே நிறைவேற்றப்பட்டன. வாக்குச்சீட்டு முறையில் சட்டங்களை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநிலங்களவையில் வேளாண் சட்டங்கள் மீது விவாதம் நடைபெற்ற போது எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவை விதிகளை மீறியதாக 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவையில் கடும் அமளி ஏற்பட்ட போது சிறிது நேரம் ஆடியோ சேவை பாதிக்கப்பட்டது. ‘ராஜ்யசபா டி.வி’யில் சப்தம் இல்லாமல் வெறும் காட்சிகள் மட்டும் ஒளிபரப்பாயின.

இந்த விவகாரம் தொடர்பாக தகவல் அறியும் சட்டத்தில் (ஆர்டிஐ) விளக்கம் கோரப்பட்டது. மாநிலங்களவையின் மைக்ரோபோன்களை மத்திய பொதுப்பணித் துறை பராமரித்து வருவதால் அந்த துறை பதில் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

மாநிலங்களவையில் கடந்த செப்டம்பர் 20-ம் தேதி மதியம் 1.05 மணி முதல் 1.35 மணி வரை ஆடியோ சேவை பாதிக்கப்பட்டது. சில எம்.பி.க்கள் அவைத் தலைவரின் இருக்கையில் இருந்த மைக்ரோபோன்களை சேதப்படுத்தியதால் ஆடியோ சேவையில் இடையூறு ஏற்பட்டது. இதன் காரணமாகவே ராஜ்யசபா டி.வி.யில் சப்தம் இல்லாமல் காட்சிகள் ஒளிபரப்பாயின. மைக்ரோபோன் சேதங்களை சீரமைக்க ஒரு மணி நேரத்துக்கும் மேலானது. இவ்வாறு அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT