மகாராஷ்ராவின் தொலைதூர மலைக்கிராமங்களில் வசிக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்காக புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சாதாரணமாக குக்கிராமங்களில் வசிக்கும் பெண்களுக்கு பிரசவ வேதனை ஏற்பட்டால் அவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. மலைக்கிராமங்களில் இப்பிரச்சினைகள் குறித்துச் சொல்லவே வேண்டாம். அவர்கள் இன்னும்கூட தோலிகளிலும் கூடைகளிலும்தான் கர்ப்பிணிப் பெண்களை பிரசவத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.
தொலைதூரக் கிராமங்களில் பிரசவ வலியில் துடிக்கும் கர்ப்பிணிப் பெண்களை துணி அல்லது கூடையில் அமரவைத்துக் கட்டப்பட்ட கழிகளை தோளில் சுமந்துசெல்லும் அவலம் மகாராஷ்டிராவில் இனி முடிவுக்கு வர உள்ளது.
மகாராஷ்டிராவின் பல்கர் மாவட்டம் மலைகள் சூழ்ந்த குக்கிராமங்கள் நிறைந்த ஒரு மாவட்டமாகும். இங்கு சில தினங்களுக்கு முன்பு, மொகாதா தாலுக்காவில் தொலைதூரக் கிராமம் ஒன்றில் வசிக்கும் கர்ப்பிணிப் பெண் பிரசவ வலியால் துடித்தபோது அவரை இப்படித்தான் உடனடி மருத்துவ வசதிக்காக தோலிகளில் தூக்கிச் சென்றனர்.
தாமதமாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவருக்குத் தகுந்த நேரத்தில் உதவி கிடைக்காத நிலையில் பிரசவசத்தின்போது தாயும் சேயும் பலியான கொடுமையும் நடந்தது. ஜவஹர் தாலுக்காவில் நடந்த இன்னொரு சம்பவத்தில் தாமதமான சிகிச்சையால் குழந்தை இறந்தே பிறந்தது.
இந்நிலையில்தான் மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்ட சுகாதாரத்துறை மகேர்கர் எனும் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு சிறந்த பராமரிப்பு மற்றும் உடனடி சிகிச்சை அளிக்கும் வகையில் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார மையங்களுக்கு அவர்கள் உடனடியாக மாற்ற முடிவு செய்துள்ளதாகவும் அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் தயானந்த் சூர்யவன்ஷி கூறியதாவது:
''மகாராஷ்டிராவில் பால்கர் மாவட்டத்தில் மருத்துவர்கள் உடனடியாக அணுக முடியாத தொலைதூரப் பகுதிகளைச் சேர்ந்த குக்கிராமங்கள் மற்றும் மலைக்கிராமங்கள் ஏராளமாக உள்ளன. இங்குள்ள தொலைதூரப் பழங்குடிப் பகுதிகளில் உள்ள கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவக் குழுக்கள் அளிக்கும் ஆலோசனையைப் பின்பற்றுவதில்லை. இதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளால் நிறைய பாதிக்கப்படுகின்றனர்.
மாவட்டத்தின், ஜவஹர் மற்றும் மொகாதா உள்ளிட்டதொலைதூர மற்றும் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் தாலுக்காக்களில் உள்ள சில குக்கிராமங்களும் மலைக்கிராமங்களும் நல்ல சாலைகள் இல்லாததால் அவர்களை உடனடியாக அணுகமுடியாத நிலையில் உள்ளனர்.
பிரவச கால நெருக்கத்தில் உள்ளவர்கள் பற்றி தகவல் சொன்னால் போதும். மருத்துவமனை ஊழியர்களே வந்து அழைத்துச் சென்றுவிடுவர். சமீபத்திய இரண்டு மோசமான சம்பவங்களை அடுத்து இந்தப் புதிய திட்டத்தை சுகாதாரத்துறை ஏற்படுத்தியுள்ளது.
பிரசவ கால நெருக்கத்தில் உள்ள அல்லது ஆபத்தான உடல்நிலைகொண்ட கர்ப்பிணிப் பெண்களைப் பற்றிய உரிய தகவல்கள் அளிக்கும்பட்சத்தில் ''மகேர்கர் '' எனப்படும் ஆரம்ப சுகாதார மையத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரசவ வீட்டுக்கு அவர்களை உடனடியாக இடம் மாற்றப்படுவார்கள்.
கர்ப்பிணிப் பெண்கள் அங்கு அழைத்துவரப்பட்டபின் மருத்துவக் குழுக்களால் நல்ல சிகிச்சை பெறுவார்கள். அதுமட்டுமின்றி கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவ உதவியாளர்களால் சிறப்பாக கவனித்துக் கொள்ளப்படுவார்கள். அவர்களுக்குச் சிறந்த முறையில் தேவையான உதவிகளை அளித்து கர்ப்பிணிப் பெண்களின் உயிரை காப்பாற்றவும் எந்தவிதச் சிக்கலுமின்றி குழந்தையைப் பெற்றெடுக்கவும் இத்திட்டம் உதவும்''.
இவ்வாறு மாவட்ட மருத்துவ அலுவலர் தெரிவித்தார்.