மாயாவதி | படம்: ஏஎன்ஐ. 
இந்தியா

மதமாற்றத்துக்கு எதிரான உ.பி.யின் புதிய சட்டத்தில் நிறைய சந்தேகங்கள்; மறுபரிசீலனை செய்க: மாயாவதி

செய்திப்பிரிவு

மதமாற்றத்திற்கு எதிராக ஏற்கெனவே நிறைய சட்டங்கள் உள்ளதாகவும், உத்தரப் பிரதேச அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தில் நிறைய சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் மாயாவதி தெரிவித்துள்ளார்.

முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி. அமைச்சரவை நவம்பர் 24ஆம் தேதி லவ் ஜிகாத்துக்கு எதிரான சட்ட மசோதாவை இயற்றியது. இச்சட்டத்திற்கு மாநில ஆளுநர் சனிக்கிழமை ஒப்புதல் அளித்தார். இதன் மூலம் திருமணத்திற்காக மதம் மாறுவது அல்லது கட்டாய மத மாற்றத்திற்காக இப்புதிய சட்டத்தில் ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. ரூ.15,000 அபராதம் விதிக்கப்படுகிறது.

'லவ் ஜிகாத்' தொடர்பான குற்றங்களுக்கு அபராதமும் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்க இந்தச் சட்டத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பட்டியல் சாதி / பட்டியல் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த சிறார்களையும் பெண்களையும் மதம் மாற்றினால் ரூ.25,000 அபராதத்துடன் 3-10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியதாவது:

''நாட்டில், பலவந்தமாக மற்றும் மோசடியில் ஈடுபட்டுச் செய்யும் மத மாற்றத்தை நிச்சயம் ஏற்க முடியாது. அதேநேரம் மதமாற்றம் தொடர்பாக பல சட்டங்கள் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளன.

லவ் ஜிகாத்துக்கு எதிராக உ.பி. அரசு அவசர அவசரமாகக் கொண்டுவந்துள்ள மத மாற்றம் தொடர்பான புதிய சட்டத்தில் நிறைய சந்தேகங்கள் உள்ளன.

எனவே, லவ் ஜிகாத்துக்கு எதிரான இச்சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென பகுஜன் சமாஜ் கட்சி கோரிக்கை வைக்கிறது''.

இவ்வாறு மாயாவதி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT