கரோனா தடுப்பு மருந்தை உடலில் செலுத்திக்கொண்ட தன்னார்வலருக்குப் பக்க விளைவு ஏற்பட்டதாகக் கூறி, ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு சீரம் மருந்து நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால், சீரம் மருந்து நிறுவனம் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. எந்தப் பக்கவிளைவும் ஏற்பட வாய்ப்பில்லை. பொய்யான பிரச்சாரங்களை வெளியிட்டால் ரூ.100 கோடி இழப்பீடு கோரப்படும் என்று பதில் அளித்துள்ளது.
இந்தச் சூழலில் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரம் இந்த விவகாரத்தில் முதல் கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது.
ஆனால், ஐசிஎம்ஆர் தரப்பில் நடத்தப்பட்ட முதல்கட்ட ஆய்வில், சீரம் மருந்து நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்ட் தடுப்பு மருந்துக்கும், தன்னார்வலருக்கு ஏற்பட்ட பக்கவிளைவுக்கும் எந்தவிதமான இயல்பான தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.
சீரம் இன்ஸ்ட்டியூட் ஆஃப் இந்தியா நிறுவனம், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜென்கா நிறுவனத்துடன் இணைந்து கோவிஷீல்ட் எனும் கரோனா தடுப்பு மருந்தைத் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையைச் சேர்ந்த 40 வயது தன்னார்வலர் சீரம் மருந்து நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட கரோனா தடுப்பு மருந்தின் 3-வது கட்ட கிளினிக்கல் பரிசோதனையில் பங்கேற்றார். சென்னையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கடந்த அக்டோபர் 1-ம் தேதி கரோனா தடுப்பு மருந்து பரிசோதனைக்குத் தன்னார்வலர் உட்பட்டார்.
ஆனால், முதல் 10 நாட்களில் எந்த பாதிப்பும் இல்லாத நிலையில் அடுத்த சில நாட்களில் நரம்பியல் ரீதியான பாதிப்புகள் ஏற்பட்டதாக தன்னார்வலர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதைத்தொடர்ந்து சீரம் மருந்து நிறுவனம் உடனடியாகக் கரோனா தடுப்பு மருந்து பரிசோதனையை நிறுத்த வேண்டும். தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு இழப்பீடாக ரூ.5 கோடி வழங்கிட வேண்டும் எனக் கோரி தன்னார்வலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சீரம் மருந்து நிறுவனம் மட்டுமல்லாது, ஐசிஎம்ஆர் இயக்குநர், இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு, பிரிட்டனில் உள்ள அஸ்ட்ராஜென்கா, ஆக்ஸ்போர்ட் தடுப்புப் பரிசோதனையின் தலைமை விசாரணை அதிகாரி ஆன்ட்ரூ பொலார்ட், ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைவேந்தர் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஐசிஎம்ஆர் அமைப்பின் தொற்றுநோய் மற்றும் பரவல் நோய் பிரிவின் இயக்குநர் மருத்துவர் சாமிரன் பாண்டா கூறுகையில், “இப்போதுள்ள சூழலில் அவசரப்பட்டு விசாரணை நடத்துவது தவறு. நிறுவன ஒழுங்குக் குழு, மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவை இது தொடர்பாக முதல்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளன. ஆனால், முதல்கட்ட ஆய்வில் தடுப்பு மருந்துக்கும், தன்னார்வலருக்கு ஏற்பட்ட பாதிப்புக்கும் இயல்பான தொடர்பில்லை எனத் தெரியவந்துள்ளது” எனத் தெரிவித்தார்.
இதற்கு சீரம் மருந்து நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “இதுபோன்ற நோட்டீஸ்கள் எங்கள் நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கில், தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்த அனுப்பப்பட்டுள்ளது. தன்னார்வலர் தன்னுடைய உடல்ரீதியான பிரச்சினைக்கு கரோனா தடுப்பு மருந்து காரணம் என்று தவறான குற்றச்சாட்டைக் கூறுகிறார். தன்னார்வலர் உடல்நலம் குறித்து சீரம் நிறுவனம் அணுதாபப்படுகிறது. ஆனால், கரோனா தடுப்பு மருந்துக்கும், தன்னார்வலர் உடல்நலப் பாதிப்புக்கும் தொடர்பில்லை.
இதுபோன்ற தவறான, பொய்யான தகவல்களை உள்நோக்கத்துடன் பரப்பினால், இழப்பீடாக ரூ.100 கோடியை சீரம் நிறுவனம் கோர வேண்டியதிருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.