மாயாவதி | கோப்புப் படம். 
இந்தியா

விவசாயிகள் கோபமடைந்துள்ளனர்; வேளாண் சட்டங்களை மறுபரிசீலனை செய்வதே சிறந்தது: மாயாவதி வேண்டுகோள்

செய்திப்பிரிவு

வேளாண் சட்டங்கள் காரணமாக விவசாயிகள் கோபமடைந்துள்ளதாகவும், இச்சட்டங்களை மறுபரிசீலனை செய்வதே சிறந்தது என்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பஞ்சாப் மற்றும் ஹரியாணாவைச் சேர்ந்த விவசாயிகள், 'டெல்லி சலோ' போராட்டத்தை 4 நாட்களாகத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். டெல்லியில் போராட்டம் நடத்தும் நோக்கில் வந்த விவசாயிகள் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விவசாயிகளிடம் இன்று ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். அதில் ''டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் புராரி மைதானத்துக்குச் சென்ற பிறகு, டிசம்பர் 3ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும். பனிக்காலத்தில் விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதால் அவர்களுக்குத் தேவையான வசதிகள் புராரி மைதானத்தில் செய்யப்பட்டுள்ளன. அதனால் அவர்கள் அங்கே செல்ல வேண்டும்'' என்றும் அமித் ஷா கேட்டுக்கொண்டார்.

அமித் ஷா இவ்வாறு கூறிய சில மணிநேரங்களுக்குப் பிறகும் விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து, வேளாண் சட்டங்களை மறுபரிசீலனை செய்வதுதான் சிறந்தது என்று மாயாவதி கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

''மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்த விவசாயம் தொடர்பான மூன்று சட்டங்கள் குறித்து நாடு முழுவதும் விவசாயிகள் ஆத்திரமடைந்துள்ளனர். இச்சட்டங்கள் நாட்டின் விவசாயிகளைக் கிளர்ந்தெழச் செய்துள்ளது.

விவசாயிகளைக் கலந்தாலோசிக்காமல் இயற்றப்பட்டுள்ளதால் இச்சட்டங்கள் குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்வதே சிறந்தது''.

இவ்வாறு மாயாவதி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT