கடன் தவணை செலுத்துவதில் மேலும் சலுகை அளிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கரோனா ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்ட போதிலும் பொருளாதாரம் மீட்சியடையாத சூழலில் கடன் தவணை செலுத்துவதில் மேலும் சலுகை அளிக்க வேண்டும் என்று அரசை நிர்பந்திக்க வேண்டாம் என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான மனு நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் ரூ.2 கோடி வரையிலான கடன் தொகைக்கு வட்டி மீதான வட்டி சலுகை அளிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது. இது தவிர துறை வாரியாக பிற தொழில்களுக்கும் இத்தகைய சலுகை அளிக்கப்படுமா, அரசமைப்பு சட்டம் 32-ன் கீழ் வேறு சலுகைகள் உண்டா என நீதிபதிகள் கேட்டதற்கு சொலிசிட்டர் ஜெனரல் இவ்விதம் பதில் அளித்தார்.
ஏற்கெனவே மறு சீரமைப்பு தொடர்பான அரசின் நடவடிக்கைகள் தொடங்கி விட்டன என்று குறிப்பிட்ட மேத்தா, இப்போதைய பொருளாதார சூழல் மற்றும் கரோனா பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பு ஆகியவற்றைப் பார்க்கும் போது இந்த நிலை எப்போது முடிவுக்கு வரும் என்று எவராலும் கூற முடியாத சூழல் உள்ளது என்று அவர் மேலும் கூறினார். இத்தகைய சூழலில் மேலும் நிவாரணம் அதாவது சலுகைகள் அளிப்பது சிரமமானது என்றார்.
துஷார் மேத்தாவின் விளக்கத்தை கேட்ட நீதிபதிகள், நீதிமன்றம் தனது வரம்பை மீறக் கூடாது என்று அரசு கூறுவது வியப்பாகஉள்ளது என்றனர். கட்டுமானத்துறை கூட்டமைப்பு கிரெடாய், மின் உற்பத்தியாளர்கள், வணிக வளாக உரிமையாளர்கள், நகைக்கடை உரிமையாளர்கள் நிவாரணம் கோரி மனு செய்திருந்தனர். ஏற் கெனவே, சிறு தொழில் நிறுவனங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் தள்ளுபடிசெய்தனர். சிறு, குறுந்தொழிலுக்கு வட்டி மீதான வட்டி ரத்து சலுகை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டது.
கிரெடாய் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி, இத்துறையில் வாராக் கடன் 97 சதவீதம் என்று குறிப்பிட்டார். அரசு சலுகை அளிக்காவிடில் இத்துறை மீள்வது கடினம் என்று வாதிட்டார். வட்டி சலுகையை அடுத்த ஆண்டு மார்ச் வரை நீட்டிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டது. இந்த மனு மீதான அடுத்த விசாரணை டிசம்பர் 2-ம் தேதி நடைபெறும் என நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.