இந்தியா

மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், உ.பி., பிஹார் மாநிலங்களில் 45 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை: நிலக்கரி சுரங்க மோசடி வழக்கில் நடவடிக்கை

செய்திப்பிரிவு

கிழக்கிந்திய நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் நடந்த நிலக்கரி மோசடி மற்றும் திருட்டு வழக்கு தொடர்பாக 45 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் நிலக்கரி சுரங்கம் செயல்படுத்தி வரும் அரசு நிறுவனமான கிழக்கிந்திய நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் முறைகேடாக நிலக்கரி சுரங்க திருட்டு நடைபெறுவது கண்டறி யப்பட்டது.

இதுதொடர்பாக வெள்ளிக் கிழமை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதில் நிறுவனத்தின் 2 பொது மேலாளர்கள், மற்றும் 2 அதிகாரிகள், தலைமை பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் பெயர்கள் சேர்க்கப் பட்டுள்ளன. இவர்களோடு சேர்த்து நிறுவனத்துக்குத் தொடர்பில்லாத அனுப் மஜி என்பவரும் பட்டியலில் சேர்க்கப்பட்டுளளார். இந்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம் மற்றும் பிஹார் ஆகிய 4 மாநிலங்களில் கிட்டத்தட்ட 45 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

அனுப் மஜி என்பவர் இந்தநிலக்கரி மோசடியில் முக்கிய மூளையாக செயல்பட்டு இருக்கிறார் என்று கூறப்படுகிறது. லாலா என்று அழைக்கப்படும் இவர், அரசியல் பின்புலத்துடன் முறைகேடாக அரசுக்குச் சொந்தமான சுரங்கங்களில் இருந்து நிலக்கரி எடுத்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிபிஐ இவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தியுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் வருமான வரித் துறை இவரிடம் விசாரணை நடத்தி நோட்டீஸும் வழங்கியுள்ளது. இந்நிலையில் 2 நாள் சுற்றுப்பயணமாக கொல்கத்தா வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, லாலாவுக்கு எதிரான சிபிஐ சோதனை குறித்து மம்தா பானர்ஜி ஏன் கவலைப்பட வேண்டும் என்று கேட்டார். இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறுகையில், ‘‘சிபிஐ சோதனையும் அமித் ஷாவின் வருகையும் திட்டமிட்டு நடப்பதாக தெரிகிறது’’ என்று கூறியிருந்தார்.

முன்னதாக மேற்கு வங்கத்தில் கால்நடைகள் கடத்தல் வழக்கில் இனாமுல்-ஹக் என்பவரை சிபிஐ கைது செய்தது. இதே வழக்கில் எல்லை பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்குக்கும், நிலக்கரி மோசடி வழக்குக்கும் தொடர்புஇருக்கலாம் எனக் கருதப் படுகிறது.

மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த சிபிஐ சோதனை நடவடிக்கைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT