கரோனா தடுப்பூசியை இன்னும் 2 வாரங்களில் அவசரகால பயன்பாட்டிற்கு கொண்டுவர விண்ணப்பிக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என சீரம் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் பணயில் ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், அகமதாபாத்தைச் சேர்ந்த ஜைடஸ் பயோடெக் பார்க், புனேயில் உள்ள சீரம் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் ஆகியவை ஈடுபட்டுள்ளன.
இந்த மூன்று நிறுவனங்களும் 2,வது 3-வது கிளினிக்கல் பரிசோதனையில் இருப்பதால், மருந்து தயாரிப்பு பணிகளை நேரடியாக இன்று பிரதமர் மோடி ஆய்வு செய்தார்.
கோவிட் தடுப்பு மருந்து மேம்பாடு மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்வதற்கான தம்முடைய மூன்று நகர பயணத்தின் ஒரு பகுதியாக, புனேயில் உள்ள சீரம் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் இந்தியாவை பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிட்டு, அங்கிருந்த குழுவினருடன் உரையாடினார்.
தடுப்பு மருந்து தயாரிப்பில் இதுவரையிலான முன்னேற்றம் குறித்தும், உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டம் குறித்தும் பிரதமரிடம் அவர்கள் விவரித்தார்.
"சீரம் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் இந்தியாவின் குழுவினருடன் நல்லதொரு உரையாடலை நடத்தினேன். தடுப்பு மருந்து தயாரிப்பில் இதுவரையிலான முன்னேற்றம் குறித்தும், உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டம் குறித்தும் அவர்கள் விளக்கினார்கள். அவர்களது தயாரிப்பு மையத்தையும் பார்வையிட்டேன்," என்று டிவிட்டர் பதிவொன்றில் மோடி கூறினார்.
இந்தநிலையில் சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா அளித்த பேட்டியில் கூறுகையில் ‘‘ கரோனாவை தடுக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியை இன்னும் 2 வாரங்களில் அவசரகால பயன்பாட்டிற்கு கொண்டுவர விண்ணப்பிக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
2021 ஜூலை மாதத்திற்குள் இந்திய அரசு எங்களிடம் இருந்து 30 முதல் 40 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளை வாங்கும் என எதிர்பார்க்கிறோம்’’ எனக் கூறினார்.