பஞ்சாப் விவசாயிகள் மீது தாக்குதலுக்கு உத்தரவிட்ட ஹரியாணா முதல்வர் இனிமேல் போன் செய்தால்கூட எடுக்கமாட்டேன் என்று பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த மூன்று நாட்களாக டெல்லி சலோ போராட்டம் நடந்து வருகிறது. பஞ்சாப் விவசாயிகள் டெல்லி செல்வதற்காக ஹரியாணா எல்லையை கடக்க முயன்றபோது போலீஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். நீர் பீரங்கிளை இயக்கி அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். விவசாயிகள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளும் வீசப்பட்டன. அதுமட்டுமின்றி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தடியடிப் பிரயோகமும் நடந்தது. போலீஸாரின் தள்ளுமுள்ளுவில் வயதான விவசாயிகளும் காயமடைந்தனர்.
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
‘‘பஞ்சாப் விவசாயிகள் மீது தாக்குதலுக்கு உத்தரவிட்ட ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் குறித்து கருத்துத் தெரிவித்த பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் ஊடகங்களிடம் கூறியதாவது:
''மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்துத்தான் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அது அவர்கள் உரிமை. அதைத் தடுக்க நீங்கள் யார். டெல்லி சலோ போராட்டத்தில் ஹரியாணா எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டதோடு பஞ்சாப் விவசாயிகள் கடுமையாக ஹரியாணா போலீஸாரின் ஒடுக்குமுறைக்கு ஆளாகியுள்ளனர். ஏன் அவர்களை தாக்கினீர்கள்.ஏன் அவர்கள் மீது நீர் பீரங்கிகளை பயன்படுத்தினீர்கள். ஏன் அவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினீர்கள்.
அவர் எனக்கு 10 முறை தொலைபேசி செய்யமுடியும். ஆனால் அவர் எத்தனை முறை பேச முயன்றாலும் நான் விவசாயிகள் போராட்டத்தில் அவர் செயல்பட்டவிதம் காரணமாக நான் அவரது தொலைபேசிக்கு பதிலளிக்கப் போவதில்லை'' என்று தெரிவித்தார்.