கரோனா தொற்றாளர்கள் உயிரிழப்புக்குக் காரணமான மருத்துவமனை தீ விபத்து குறித்து குஜராத் அரசிடம் உச்ச நீதிமன்றம் அறிக்கை கோரியுள்ளது.
குஜராத்தின் ராஜ்கோட்டில் கோவிட் -19 மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து கரோனா வைரஸ் நோயாளிகள் உயிரிழந்ததாக துணை முதல்வர் நிதின் படேல் தெரிவித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மற்ற 28 கரோனா தொற்றாளர்கள் மீட்கப்பட்டு பிற மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதற்கு பிரதமர் மோடி, ''ராஜ்கோட் கோவிட் மருத்துவமனை தீ விபத்து மிகுந்த வேதனை அளிக்கிறது'' என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
கோவிட் 19 நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டியது குறித்த விழிப்புணர்வுக்காகவும் மருத்துவமனைகளில் இறந்த உடல்களை கண்ணியமாக கையாள்வது குறித்து விழிப்புணர்வுக்காகவும் கோவிட் தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது.
ஏற்கெனவே கடந்த 23-ம் தேதி உச்சநீதிமன்றம், கோவிட் பாதிப்புகள் டெல்லியில் மோசமடைந்துள்ளதையும் குஜராத்தில் கட்டுப்பாட்டை மீறியுள்ளதையும் குறிப்பிட்டு நாடு முழுவதும் நிலைமையைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் இரண்டு நாட்களுக்குள் ஆய்வு செய்யுமாறு மத்திய அரசுக்கும், மாநிலங்களுக்கும் உத்தரவிட்டது.
இவ்வழக்கில் மத்திய அரசின் சார்பில் இன்று ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது வாதத்தில், ''தற்போது நாட்டில் கோவிட் 19 அலை முன்பை விட கடுமையானதாகத் தோன்றுகிறது, நாட்டின் மொத்த பாதிப்புகளில பத்து மாநிலங்களில் மட்டுமே 77 சதவீதமாக உள்ளது. மத்திய உள்துறை செயலாளர் சனிக்கிழமையன்று ஒரு கூட்டத்தை கூட்டி, இந்தியா முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் தீ பாதுகாப்பு குறித்த வழிமுறைகளை வெளியிடுவார்'' என்று நீதிமன்ற அமர்வுக்கு உறுதியளித்தார்.
இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர்.எஸ்.ரெட்டி மற்றும் எம்.ஆர் ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு இதுகுறித்து கூறியதாவது:
''நாட்டில் ஒரு அலையாக உயர்ந்துகொண்டிருக்கும் தொற்றுநோயை சமாளிக்க மாநிலங்கள் முன்வரவேண்டும், அரசியலுக்கு அப்பால் இருந்து இதை அணுக வேண்டும். நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த கொள்கை, வழிகாட்டுதல்கள் மற்றும் நிலையான நடைமுறைகளை (எஸ்ஓபி) செயல்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய நேரம் இது. அனைத்து மாநிலங்களும், மத்திய அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் கருதுகிறது.
இன்றைய ராஜ்கோட் மருத்துவமனை தீவிபத்து காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். மிகவும் துரதிஷ்டவசமான இச்சம்பவம் குறித்து குஜராத் அரசிடம் விளக்க அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவது குறித்து கவலை அளிக்கிறது. கரோனா பரவல் டிசம்பரில் நிலைமை மோசமடைய வாய்ப்புள்ளது, மேலும் அனைத்து மாநிலங்களும் இதை "எதிர்த்துப் போராட" தயாராக இருக்க வேண்டும்.
இவ்வாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.