குஜராத் மருத்துவமனை தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இதற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ராஜ்கோட் கோவிட் மருத்துவமனை தீ விபத்து மிகுந்த வேதனை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் ராஜ்கோட் நகரில் உதய் சிவானந்த் எனும் தனியார் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணி அளவில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட தொற்றாளர்கள் 5 பேர் பலியானதாக தீயணைப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும், சிகிச்சை பெற்று வரும் கரோனா வைரஸ் நோயாளிகள் 28 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட நோயாளிகள் மற்ற கோவிட்-19 மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதற்கு பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு:
"ராஜ்கோட்டில் ஒரு மருத்துவமனையில் நேர்ந்த தீ விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து மிகுந்த வேதனையடைந்துள்ளேன். எனது எண்ணங்கள் முழுவதும் இந்த துரதிர்ஷ்டவசமான துயரச் சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களோடு பிணைந்துள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவாக குணமாக வேண்டுமென பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்பதை நிர்வாகம் உறுதி செய்கிறது''.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.