கரோனா பரவல் காரணமாக வழக்கமான சர்வதேச விமான சேவை வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாத இறுதியில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதன்படி, பேருந்து, ரயில், விமானம் உட்பட அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. எனினும், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப வசதியாக ‘வந்தே பாரத்’ என்ற பெயரில், கடுமையான கட்டுப்பாடுகளுடன் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, பொது முடக்ககட்டுப்பாடுகள் படிப்படியாக திரும்பப் பெறப்பட்டு வருகின்றன. எனினும், சர்வதேச விமான சேவை மட்டும் இன்னமும் தொடங்கப்படவில்லை.
இந்நிலையில், வழக்கமான சர்வதேச விமான சேவை வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக விமான போக்குவரத்துத் துறை நேற்று அறிவித்தது. இதுதொடர்பாக விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) நேற்று வெளியிட்ட சுற்றறிக்கையில், “கரோனா பரவலை தடுக்க சர்வதேச விமானசேவை ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டது. இந்த நிலை டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்படுகிறது.
எனினும், வந்தே பாரத் விமானசேவைகள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இயக்கப்படும். இதுபோல அனைத்து சர்வதேச சரக்கு விமானங்களும் டிஜிசிஏ சிறப்பு அனுமதி பெற்ற விமானங்களும் இயக்கப்படும். இதுதவிர, குறிப்பிட்ட வழித்தடங்களில் டிஜிசிஏ அதிகாரிகளின் அனுமதியுடன் வழக்கமான சில விமானங்களை இயக்க அனுமதிக்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.