கர்நாடக அமைச்சரவையில் காலியாக உள்ள 7 இடங்களை நிரப்ப வேண்டும் என 10-க்கும்மேற்பட்ட மூத்த பாஜக எம்எல்ஏக்கள் கோரி வருகின்றனர். இதற்கு சம்மதம் தெரிவித்துள்ள முதல்வர் எடியூரப்பா அமைச்சரவை விரி வாக்கம் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
பாஜக மூத்த எம்எல்ஏக்களும், காங்கிரஸ், மஜதவில் இருந்து பாஜகவுக்கு கட்சி மாறிய எம்.டி.பி.நாகராஜ், ஆர்.சங்கர், எச்.விஸ்வநாத் ஆகியோரும் அமைச்சர் பதவியை கைப்பற்ற தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் பாஜகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ரேணுகாச்சார்யா, ராஜுகவுடா, சங்கர் பாட்டீல், பூர்ணிமா சீனிவாஸ் உள்ளிட்டோர் நேற்று பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இன்னும் சில மூத்த எம்எல்ஏக்கள் நீர்வளத்துத்துறை அமைச்சர்ரமேஷ் ஜார்கிகோளி வீட்டில்ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் அமைச்சர் பதவிக்கேட்டு போர்க்கொடி தூக்கியுள்ளதால் முதல்வர் எடியூரப்பாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று எடியூரப்பா பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அமைச்சரவைவிரிவாக்கம் செய்வது, செயல்படாமல் இருப்பவர்களை நீக்குவது, புதியவர்களுக்கு வாய்ப்பு அளிப்பது, காங்கிரஸ், மஜதவில் இருந்து வந்தவர்களுக்கு வாக்களித்தவாறு அமைச்சர் பதவிவழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து முதல்வர் எடியூரப்பா கூறுகையில், ‘‘அமைச்சரவை விரிவாக்கம் செய்வது குறித்து பாஜக தேசிய தலைவர்ஜே.பி.நட்டா, தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ்உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தியுள்ளேன். அமைச்சரவையை மாற்றி அமைப்பது, விரிவாக்கம் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஓரிருநாட்களில் ஊடகங்களுக்கு தெரிவிக்கிறேன்'' என்றார்.