ஆளுநர் அல்லது துணைநிலை ஆளுநர்கள், சிபிஐ, நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட 3 முக்கிய கருவிகளைக் கொண்டு மத்திய அரசு மாநிலங்களை மிரட்டுவதாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டி உள்ளார்.
டெல்லி அரசின் சார்பில் ‘கூட்டாட்சி ஒத்துழைப்பு’ என்ற தலைப்பில் மாநில முதல்வர்கள் மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அர்விந்த் கேஜ்ரிவால் பேசியதாவது:
டெல்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் மத்திய அரசின் முகவரைப் போல செயல்படுகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி தலைமையிலான டெல்லி அரசால் பிறப்பிக்கப்பட்ட 30 ஆணைகளை செல்லாது என நஜீப் ஜங் அறிவித்துள்ளார். நம் நாட்டின் வரலாற்றில் துணைநிலை ஆளுநர் ஒருவர் இப்படி செயல்பட்டிருப்பது இதுவே முதன்முறை.
மத்திய அரசும் துணைநிலை ஆளுநரும் மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையிடுவது மட்டுமல்லாமல், நீதித் துறையின் அதிகாரத்தையும் கேள்விக்குறியாக்குகின்றன. சட்டத்துக்கு புறம்பாக இருந்தால் மாநில அரசுகளின் உத்தரவை ரத்து செய்ய நீதிமன்றங்களுக்குதான் அதிகாரம் உள்ளது. ஆனால், மத்திய அரசும் துணைநிலை ஆளுநரும் தங்களுக்குதான் அதிகாரம் உள்ளது என்கிறார்கள். இவர்களது கருத்து நீதிபதிகளே தேவையில்லை என்பது போல உள்ளது.
டெல்லி அரசின் செயல்பாட்டில் மட்டுமல்லாமல் மேற்குவங்கம் உள்ளிட்ட மற்ற மாநில அரசுகளின் செயல்பாட்டிலும் மத்திய அரசு மூக்கை நுழைக்கிறது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். மத்திய அரசிடம் அதிகாரம் குவியாமல் பகிர்ந்தளிக்கப்பட வேண்டியது அவசியம். மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும் என அரசியலமைப்பு சட்டம் வலியுறுத்துகிறது.
மொத்தத்தில் மாநில அரசுகளின் செயல்பாட்டில் குறுக்கிடுவதற்காக, ஆளுநர் அல்லது துணைநிலை ஆளுநர்கள், சிபிஐ, நிதி ஒதுக்கீடு ஆகிய 3 முக்கிய கருவிகளை மத்திய அரசு பயன்படுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு பாஜக, காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்காரும் மட்டுமே கலந்து கொண்டனர். எனினும், பிஹார், மிசோரம், புதுச்சேரி மாநில முதல்வர்கள் இந்த மாநாட்டுக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் எழுதி இருந்தனர்.