இந்தியா

ஹர்திக் படேலை 7 நாட்கள் விசாரணைக் காவலில் வைக்க உத்தரவு

பிடிஐ

அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டு போராட்டக் குழுவின் படேல்கள் அமைப்புத் தலைவர் ஹர்திக் படேலை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அகமதாபாத் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஹர்திக் படேலை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்ட மனுவின் மீதான விசாரணையை மேற்கொண்ட நகர மேஜிஸ்ட்ரேட் பிரம்பட் 7 நாட்கள் விசாரணைக் காவலுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட மேஜிஸ்ட்ரேட் வீட்டில் நேற்று இரவு ஹர்திக் படேல் ஆஜர் படுத்தப்பட்டார். இதனையடுத்து இன்று காலை வரை 'மராத்தான்' விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையில், இட ஒதுக்கீட்டு போராட்டத்தின் பின்னணியில் உள்ளவர்கள் யார், பணம் எங்கிருந்து வருகிறது என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விசாரணைக் குழுவினரால் கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும், படேல்கள் ஆர்பாட்டம் நடைபெறும் போதெல்லாம், அல்லது ஹர்திக் படேல் கைது செய்யப்படும் போதெல்லாம் வன்முறைச் சம்பவங்கள் ஏற்படுவது ஏன் என்பதையும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக ஹர்திக் படேல் சதிவேலைகளில் ஈடுபடுகிறாரா போன்ற கோணங்களில் விசாரிக்க வேண்டும் என்று விசாரணைக் குழு வாதிட்டனர்.

இந்நிலையில் 7 நாட்கள் விசாரணைக் காவலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT