அர்ஜென்டினா கால்பந்து வீரர் மாரடோனா காலமான நிலையில், அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக கேரள அரசு இரண்டு நாள் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது.
மாரடைப்பு காரணமாக புதன்கிழமை அன்று உலகின் புகழ்வாய்ந்த பிரபல கால்பந்து வீரர் டியாகோ அர்மாண்டோ மாரடோனா (60) காலமானார். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக கேரள அரசின் மாநில விளையாட்டுத் துறையின் சார்பாக இரண்டு நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அறிவிப்பை வெளியிட்ட கேரள விளையாட்டுத் துறை அமைச்சர் ஜெயராஜன், ''மாரடோனாவின் மறைவு உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவிலும், லட்சக்கணக்கான ரசிகர்கள் அவர் மறைவை நம்ப முடியாத நிலையில் உள்ளனர். இந்தச் சூழ்நிலையில், வியாழக்கிழமை முதல் இரண்டு நாள் துக்கத்தை அனுசரிக்க மாநில விளையாட்டுத் துறை முடிவு செய்தது'' என்று தெரிவித்துள்ளார்.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மாரடோனா, மூளையில் ரத்த உறைவை அகற்ற இம்மாதத்தின் தொடக்கத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். 2 வாரங்கள் கடந்த பிறகு இதய நோய் பாதிப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார்.
மாரடோனா ஒரு தனியார் நிகழ்ச்சிக்காக 2012 அக்டோபரில் இரண்டு நாட்கள் கேரளாவிற்கு வருகை புரிந்தார். இப்பகுதியின் கால்பந்து ரசிகர்கள், இது ஒரு கடவுளால் அனுப்பப்பட்ட வாய்ப்பாகவே எண்ணித் திளைத்தனர். கண்ணூரில் மாரடோனா தங்கியிருந்த பகுதிகளில் மிகவும் நெருக்கமான தங்கள் ஹீரோவைக் கண்டு ரசித்தனர். அதுமட்டுமின்றி மாரடோனாவின் நிகழ்வில் பங்கேற்க மூன்று நாள் முன்னதாகவே அவரைக் காண கேரள ரசிகர்கள் ஸ்டேடியத்தில் காத்திருக்கத் தொடங்கிவிட்டனர்.
கேரள முதல்வர் இரங்கல்
மறைந்த கால்பந்து வீரர் மாரடோனாவின் மறைவுக்கு கேரள முதல்வர் தனது இரங்கல் செய்தியில், ''டியாகோ மாரடோனாவின் மரணம் மிகுந்த வருத்தமளிக்கிறது. உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்கள் தனது சிறந்த கால்பந்து வீரனை இழந்து தவிக்கிறார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.