இடம்: சென்னை அண்ணாசாலை 
இந்தியா

நிவர் புயலால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

நிவர் புயல் காரணமாக தமிழகத்தின் நாகப்பட்டி்னம், மயிலாடுதுறை, கடலூர், விழும்புரம் மற்றும் செங்கல்பட்டு மற்றும் காரைக்கால், புதுச்சேரியில் பாதிப்புக்கள் ஏற்படும் என்பதால் மக்கள் போதிய முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:

தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் தமிழகம், புதுச்சேரியின் வடக்கு கடலோர மாவட்டங்களில் இன்று மாலை முதல் நாளை காலை வரை காற்றின் வேகம் மணிக்கு 120 கி.மீ முதல் 145 கி.மீ வரை அதிகரிக்கும்.

தமிழகம், புதுச்சேரி, ஆந்திராவின் தெற்கு கடலோர பகுதி, மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளில் கடல் கொந்தளிப்பாக காணப்படும். கடலோர மாவட்டங்களில் ராட்சத அலை 1 மீட்டர் முதல் 1.5 மீட்டர் உயரம் வரை எழும்.

தமிழகத்தின் நாகப்பட்டி்னம், மயிலாடுதுறை, கடலூர், விழும்புரம் மற்றும் செங்கல்பட்டு மற்றும் காரைக்கால், புதுச்சேரியில் எதிர்பார்க்கப்படும் பாதிப்புகள்:

* குடிசை வீடுகள் பலத்த சேதமடையும், உலோக தகடுகள் பறக்கலாம்.

* மின் மற்றும் தொலை தொடர்பு, ரயில்வே மின் கம்பிகள் பாதிப்படையலாம்.

* பாதுகாப்பற்ற வீடுகள் சேதமடையும். சாலைகள் சேதமடையும். சில பகுதிகளில் வெள்ளம் ஏற்படும்.

* மரங்கள் முறியலாம், வேரோடு சாயலாம். வாழை, பப்பாளி, தோட்டக்கலை பயிர்களுக்கு பலத்த சேதம் ஏற்படும்.

* படகுகள் இழுச்துச் செல்லப்படலாம்.

* கடலோர மாவட்டங்களில் பயிர்கள் சேதமடையும்.

* நீர் தேக்கங்களின் கரைகள், உப்பளங்கள் சேதமடையும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

* மீன்பிடி நடவடிக்கைகள் முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும்.

* கடலோர பகுதிகளில் குடிசைகளில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப வேண்டும்.

* பாதிக்கப்படும் பகுதிகளில் மக்கள் வீட்டுக்குள் இருக்க வேண்டும்.

* படகுகளில் பயணம் செய்வது பாதுகாப்பற்றது.

இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT