இந்தியா

பிஹாரில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கடிதம்: தேர்தல் அறிக்கையின் நகல் சமர்ப்பிக்க ஆணையம் உத்தரவு

பிடிஐ

பிஹாரில் அரசியல் கட்சிகள் தங்கள் ‘தேர்தல் அறிக்கை’களின் நகலை சமர்ப்பிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பிஹார் சட்டப்பேரவை தேர்தல் வரும் 12-ம் தேதி தொடங்கி 5 கட்டங்களாக நடக்கிறது. இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை எல்லா அரசியல் கட்சிகளும் முறையாக பின்பற்ற வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கடந்த வெள்ளிக்கிழமை நினைவூட்டல் கடிதம் அனுப்பி உள்ளது.

அதில், ‘‘கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் உச்ச நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவுக்குப் பின்னர், தேர்தல் அறிக்கை குறித்த சில விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அவற்றை பின்பற்றிதான் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையை தயாரிக்க வேண்டும். தேர்தல் அறிக்கை வெளியிட்ட பின்னர், அதன் நகலை எல்லா அரசியல் கட்சிகளும் அல்லது வேட்பாளர்களும் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

தேர்தல் அறிக்கை நகலை தேர்தல் ஆணையம் மற்றும் மாநிலத்தில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் அறிக்கை குறித்த வழிகாட்டு நெறிமுறையில், ‘‘நியாய மான சுதந்திரமான தேர்தல் நடத்து வதற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் இடம்பெறக் கூடாது. நடத்தை விதிமுறைகளை மீறியதாக இருக்க கூடாது. நம்பமுடியாத வகையில் வாக்குறுதிகளை அளிக்க கூடாது. வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு தேவைப்படும் நிதி உட்பட முக்கிய விஷயங்கள் ஏற்கத்தக்கதாக இருக்கவேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT