இந்தியா

நிவர் புயலால் புதுச்சேரி, காரைக்காலுக்கு அதிக பாதிப்பு: இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் தகவல்

ஏஎன்ஐ

நிவர் புயலால் புதுச்சேரி, காரைக்காலில் பாதிப்பு அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையத் தலைவர் டாக்டர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா தெரிவித்துள்ளார்.

நிவர் புயலானது தற்போது கடலூருக்கு கிழக்கு தென்கிழக்கே 290 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கில் 300 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 350 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 11 கி.மீ வேகத்தில் இப்போது நகர்ந்து கொண்டிருந்தது.

இந்தப் புயல், இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நிவர் புயலால் புதுச்சேரி, காரைக்காலில் பாதிப்பு அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையத் தலைவர் டாக்டர் மிருதஞ்சய் மொஹபத்ரா தெரிவித்துள்ளார்.

மேலும், புயல் கரையைக் கடக்கும்போது கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படும், மரங்கள் வேரோடு சாயலாம், கூரை, தகர வீடுகள் சேதமடையும், வாழை, நெற்பயிர்கள் பேரிழப்பை சந்திக்கும். பலத்த காற்று வீசும், கனமழை பெய்யும் என அவர் கூறியுள்ளார்.

ராணுவம் உதவிக்கரம்:

நிவர் புயலால் தமிழகம், புதுச்சேரியில் பாதிப்பு அதிகம் ஏற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய ராணுவம் தயார் நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 12 மீட்புக்குழுக்களும், 2 தொழில்நுட்பக் குழுக்களும் தயார் நிலையில் இருப்பதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT