லவ் ஜிகாத்தில் சிவசேனா மென்மையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
திருமணத்துக்காக மதம் மாறுவது செல்லாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை சுட்டிக் காட்டி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத், லவ் ஜிகாத்தை தடுக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று ஏற்கெனவே உறுதி அளித்துள்ளதாகக் கூறினார். உத்தர பிரதேசம் மட்டுமன்றி பாஜக ஆளும் ஹரியாணா, கர்நாடகாவிலும் இதுபோன்ற சட்டத்தை இயற்ற முடிவு செய்யப்பட்டது. இந்த வரிசையில் பாஜக ஆளும் மத்திய பிரதேசத்திலும் லவ் ஜிகாத்தை தடுக்க புதிய சட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக மாநில அரசு தெரிவித்திருந்தது.
இதில் லவ் ஜிகாத் குறித்து மகாராஷ்டிரா ஆட்சியின் கூட்டணி தலைமையில் உள்ள சிவசேனா நிலைப்பாடு மென்மையாக இருப்பதாக பாஜக கூறியுள்ளது.
சமீபத்தில் பிஹாரில் ஏதேனும் லவ் ஜிகாத் சட்டத்தை அமல்படுத்தும் திட்டம் இருக்கிறதா என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவுத் பாஜக-ஐக்கிய ஜனதா தள ஆட்சியைக் குறிவைத்து கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும்விதமாக முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சிவசேனா ஒரு காலத்தில் காதலர் தினக் கொண்டாட்டங்களுக்கு எதிராக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததற்கும், காதல் ஜோடிகளை அடிப்பதற்கும் பெயர் பெற்றது. ஆனால் தற்போது சிவசேனா நேர்மாறாக செயல்பட்டு வருகிறது.
2014 முதல் 2016 வரை லவ் ஜிகாத்துக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை செய்துவருவதை வழக்கமாகக் கொண்டிருந்த சிவசேனா தற்போது லவ் ஜிகாத் குறித்து தனது கருத்தில் மென்மையான நிலைப்பாடுகளையே கொண்டுள்ளது.
சிவசேனாவின் தற்போதைய நடவடிக்கைகள் மூலம் அதன் நிலைப்பாடு காரணமாக அந்தக் கட்சி எவ்வளவு மாறிவிட்டது என்பதையே இது காட்டுகிறது.
இவ்வாறு தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
2019 -ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு சிவசேனாவும் பாஜகவும் பிரிந்ததிலிருந்து கடும் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகின்றன. தேசியவாதக் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸுடன் கைகோர்த்த சிவசேனா, மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடி (எம்.வி.ஏ) அரசாங்கத்தை அமைத்த பிறகு பாஜக தொடர்ந்து விமர்சித்து வருகிறது.