இந்தியா

நிவர் புயல்: கல்பாக்கம்  அணுமின் நிலையத்தில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள்

செய்திப்பிரிவு

நிவர் புயலை எதிர்கொள்ள கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சென்னையிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு கடற்கரை சாலையின் கல்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை அணுசக்தி நிலையம், வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயலை எதிர்கொள்ள தயாராக உள்ளது.

220 மெகாவாட் முழு திறன் கொண்ட இரண்டாவது பிரிவு முழுவீச்சில் இயங்கிக்கொண்டிருக்கிறது. நிலையத்தின் அனைத்துப் பிரிவுகளும் முறையாக இயங்கிக் கொண்டிருப்பதால் புயல் கரையைக் கடக்கும் பொழுது அதன் தாக்கத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புயல் பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு, கடற்கரையோரங்களில் மணல் மூட்டைகளை வைத்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வானிலை அறிவிப்புகளை தொடர்ந்து கண்காணித்து வரும் நிலைய அதிகாரிகள், தேவையானபோது அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளத் தயாராக உள்ளனர்.

இந்தத் தகவல் கல்பாக்கம் சென்னை அணுசக்தி நிலையத்தின் இந்திய அணுசக்தி நிறுவனத்தின் நிலைய இயக்குநர் ஸ்ரீனிவாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT