தேசியக் கொடியை அவமதித்ததாக, இட ஒதுக்கீடு கோரி போராடி வரும் படிடார் அனாமத் அந்தோலன் சமிதி ஒருங்கிணைப்பாளர் ஹர்திக் படேலை குஜராத் காவல் துறையினர் கைது செய்தனர்.
ஏற்கெனவே ஹர்திக் படேல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். அவர் தேசியக் கொடியை அவமதித்ததாக் கூறி வழக்குப் பதிவு செய்த பதாரி காவல் துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக ராஜ்கோட் காவல் கண்காணிப்பாளர் (ஊரகம்) ககன்தீப் காம்பீர் கூறும்போது, “நாங்கள் அனைத்து வீடியோ தரவுகளையும் தெளிவாக பரிசோதித்து விட்டோம். அவற்றில், தேசிய கொடியை ஹர்திக் அவமதிப்பது தெளிவாக தெரியவந்துள்ளது. எனவே, அவருக்கு எதிராக பதாரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் ஹர்திக் கைது செய்யப்பட்டுள்ளார். நாங்கள் அவரைத் தடுத்த போது, காரின் கூரை மீது குதித்து அமர்ந்தார். அப்போது, மூவர்ணக் கொடி அவரின் காலில் பட்டுக் கொண்டிருந்தது. இது தேசியக் கொடியின் கண்ணியத்துக்கு எதிரானது. சட்டப்படி இதற்கு அனுமதியில்லை” எனத் தெரிவி்ததார்.
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் போது, போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஹர்திக் மிரட்டல் விடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் ஹர்திக் படேல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில்தான், தேசியக்கொடி அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஹர்திக்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்போவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்ததாக மேலும் ஒரு வழக்கு
ஹர்திக் படேல் மீது அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்ததாக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 3-ம் தேதி தனது சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை ‘தற்கொலை செய்து கொள்வதற்குப் பதில் காவலர்களைக் கொல்’ எனத் தூண்டி விட்டதாக் கூறி, எதிராக கிளர்ச்சி செய்வதாக ஹர்திக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அம்ரோலி காவல் நிலையத்தில், ஹர்திக் மீது அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்தல் (பிரிவு 124-ஏ) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இடஒதுக்கீடு போராட்டத்துக்கு ஆதரவாக விபுல் தேசாய் என்ற இளைஞர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார். அவரிடம் பேசிய ஹர்திக், “உனக்கு அவ்வளது துணிச்சல் இருந்தால், 2 காவலர்களைக் கொல். படேல் சமூகத்தினர் ஒருபோதும் தற்கொலை செய்வதில்லை” எனக் கூறினார். இந்த உரையாடல் தொலைக்காட்சிகளில் ஒலிபரப்பானது. இதையடுத்து அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.