சிவசேனா எம்எல்ஏ., பிரதாப் சர்நாயக் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் அதிரடி சோதனையின் ஈடுபட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் தானே தொகுதியின் எம்எல்ஏ.,வான பிரதாப் சர்நாயக் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனைப் புகார் எழுந்தது. இதனையடுத்து சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
பிரதாப் சர்நாயக் இதற்கு முன்னதாகவும் ஊடக கவனம் பெற்றிருக்கிறார். மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டதற்காக பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று சர்நாயக் கோரிக்கை விடுத்திருந்தார்.
அது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "எம்பி சஞ்சய் ராவத் கங்கனாவை மிகவும் லேசான முறையில் எச்சரித்தார். அவர் இங்கு வந்தால் எங்கள் துணிச்சலான பெண்கள் அவரை அறையாமல் அனுப்ப மாட்டார்கள். தொழிலதிபர்களையும் திரைப்பட நட்சத்திரங்களையும் உருவாக்கும் நகரமான மும்பையை ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிடுவதற்காக தேசத் துரோக வழக்கை கங்கனா மீது வழக்கு பதிவு செய்யுமாறு நான் கோருவேன்" எனக் காட்டமாகப் ட்வீட் செய்தது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கங்கனா ரணவத்தை மிகக் கடுமையாக விமர்சித்த சிவசேனா எம்எல்ஏ வீடு, அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டுள்ளது பல்வேறு விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
நடிகை கங்கனா ரணவத்தும் அவரது சகோதரியும் பிரதமர் மோடியின் ஆதரவாளர்கள். பாஜகவில் தங்களை இணைத்துக் கொள்ளாவிட்டாலும் பாஜக ஆதரவாளர்களாகவே தங்களைக் காட்டிக் கொள்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.