தலைநகர் டெல்லியில் கரோனா காட்டுத்தீ போல் பரவி வரும் சூழலில் அங்கு பரிசோதனைகளை அதிகரிக்கும் வகையில் நடமாடும் ஆர்டி-பிசிஆர் ஆய்வகத்தைத் திறந்துவைத்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.
டெல்லி அன்சாரி நகரில் உள்ள ஐசிஎம்ஆர் மையத்தில் புதிய நடமாடும் ஆர்டி-பிசிஆர் ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின்போது அமைச்சர் ஹர்ஷ் வர்த்தனும் உடன் இருந்தார்.
இந்தியாவில் கரோனா பாதிப்பு 90 லட்சத்தைக் கடந்துள்ளது. நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பால் 1,33,227 பேர் மரணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், கரோனா வைரஸ் டெல்லியில் அதி வேகமாகப் பரவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் அமித் ஷா தலைமையில் நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
தொடர்ந்து டெல்லியில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.2000 அபராதம் போன்ற உத்தரவுகளை முதல்வர் கேஜ்ரிவால் பிறப்பித்தார். இத்தகைய சூழலில் ஆர்டி-பிசிஆர் ஆய்வகத்தைத் திறந்துவைத்துள்ளார் அமித் ஷா.