தலைநகர் டெல்லியில் கரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில், சிகிச்சையில் கைகொடுக்குமாறு எம்பிபிஎஸ் மாணவர்கள், பல் மருத்துவ மாணவர்களுக்கு அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்அழைப்பு விடுத்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் இன்று காலை நிலவரப்படி 40,212 பேருக்கு கரோனா பாதிப்பு உள்ளது. இதுவரை 8391 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் புதிதாக 6,746 பேருக்கு தொற்று ஏற்பட்டது. 121 பேர் பலியாகினர்.
அன்றாடம் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை படுவேகமாக அதிகரித்து வருவதால், கரோனா சிகிச்சைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் 4,5-வது ஆண்டு பயிலும் மருத்துவ மாணவர்கள், பல் மருத்துவ மாணவர்கள் இணைந்து பணியாற்ற கேஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கான உத்தரவையும் அவர் பிறப்பித்துள்ளார்.
அவ்வாறு பணியாற்றும் மருத்துவ மாணவர்களுக்கு 8 மணி நேரம் கொண்ட ஒரு ஷிஃப்டுக்கு ரூ.1000 ஊக்கத் தொகை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். 12 மணி நேர ஷிஃப்ட் பார்ப்போருக்கு ரூ.2000 வழங்கப்படும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
சந்தைகள் மூடல் உத்தரவு வாபஸ்:
மேற்கு டெல்லியில் உள்ள பஞ்சாபி பஸ்தி மார்க்கெட், நங்லோயில் உள்ள ஜனதா மார்க்கெட்டை வரும் 30-ம் தேதி வரை மூட முதல்வர் கேஜ்ரிவால் உத்தரவிட்டிருந்தார். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளான மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் போன்றவை காற்றில் பறக்கவிடப்பட்டதால் முதல்வர் இந்த முடிவை எடுத்திருந்தார்.
ஆனால், சில மணி நேரங்களிலேயே சந்தை மூடல் உத்தரவை முதல்வர் வாபஸ் பெற்றார்.
கரோனா பரவல் நிலைமை, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்யுமாறு டெல்லி, குஜராத் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.