ஊழல் பிரச்சினைகளைத் தனது கட்சி தொடர்ந்து எழுப்பி, அவற்றைப் பகிரங்கமாக்கும் என்று ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.
பிஹாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பிய ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கடந்த நவம்பர் 16ஆம் தேதி அன்று முதல்வர் நிதிஷ் குமாரின் புதிய அமைச்சரவையின் 14 அமைச்சர்களில் ஒருவராகப் பொறுப்பேற்ற மேவாலால் சவுத்ரி பதவி விலகினார். இதைத் தொடர்ந்து பிஹார் கட்டிடக் கட்டுமான அமைச்சர் அசோக் சவுத்ரிக்கு கல்வித் துறையின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.
பிஹார் அமைச்சர் மேவாலால் சவுத்ரி பதவி விலகியது தங்களுக்குக் கிடைத்த வெற்றியா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, தேஜஸ்வி கூறியதாவது:
"ஒரு மாற்றத்திற்காகத்தான் தேர்தல் மூலம் ஆட்சியதிகாரம் வழங்கப்படுகிறது. ஆனால், ஊழல் செய்தவர்களுக்கு எதற்கு பதவி? மேவாலால் மீது ஊழல் காரணமாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.
இருந்தாலும், மேவாலால் சவுத்ரி வென்றார். கல்வி அமைச்சராக்கப்பட்டார். இதனை எதிர்த்து ஆரம்பத்திலிருந்தே நான் குரல் எழுப்பி வருகிறேன். அதனால்தான் அவர் (மேவாலால்) ராஜினாமா செய்யவேண்டுமென நாங்கள் கோரினோம். அது நடந்தது.
ஊழல் தொடர்பான பிரச்சினைகளைப் பொதுமக்களிடம் நாங்கள் தொடர்ந்து எழுப்புவோம். அவற்றைப் பகிரங்கமாக்குவோம்."
இவ்வாறு தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.