அவதூறு செய்தி வெளியிட்டால் 5 ஆண்டு சிறை தண்டனை என்று போலீஸ் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருக்கும் கேரள அரசின் செயல் பாஸிசம் என காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரம் கருத்துத் தெரிவித்துள்ளார்.
கேரள போலீஸ் சட்டத்தில் பிரிவு 118ல் 118ஏ என்ற ஓர் பிரிவு கூடுதலாகச் சேர்க்கப்பட்டு, போலீஸாருக்குகூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு தனிநபரின் மரியாதையை, மாண்பைக் குலைக்கு உள்நோக்கத்துடன் சமூக வலைத்தளத்தில் கருத்துக்களைப் ,படங்களை, பதிவேற்றம் செய்தால், பரப்பினால், ஷேர் செய்தால், அல்லது பிரசுரித்தால், அவருக்கு அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் அபராதம், 5 ஆண்டு சிறை விதிக்கப்படும். அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டம் போலீஸாருக்கு அதிகமான அதிகாரம் அளிக்கும், கருத்துச் சுதந்திரத்தை முடக்கும், பத்திரிகை சுதந்திரத்தை முடக்கும் என்று காங்கிரஸ் , பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.
இந்த அவசரச் சட்டத்திருத்தத்துக்கு ஆளுநர் முகமது ஆரிஃப் கான் நேற்று ஒப்புதல் அளித்துவிட்டார்.
இதுகுறித்து கேரள மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் கூறியதாவது:
இது முழுக்க முழுக்க பாஸிசம். இந்த சட்டத்தை கொண்டு வருவதன் பின்னணியில் சதி உள்ளது. தங்க கடத்தில் உள்ளிட்ட வழக்குகளில் சிக்கி தவிக்கும் கேரள மாநில அரசு விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் அதனை ஒடுக்குவதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.