பிரதிநிதித்துவப் படம். 
இந்தியா

பிஹாரில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை; அதிரடிப்படைத் தளபதி உயிரிழப்பு

பிடிஐ

பிஹார் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிரடிப்படையினருடன் நடந்த மோதலில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்; இதில் மண்டலத் தளபதியும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிஹார் மாநிலம் கயா மாவட்டத்தில், மாவட்ட தலைநகரில் இருந்து சுமார் 100 கி.மீ தூரத்தில் உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக அதிரடிப் படையினருக்கு தகவல் கிடைத்தது.

மாவட்டத்தின் பராச்சட்டி வனப்பகுதிக்கு அதிரடிப்படையினர் விரைந்தனர், அப்பகுதியில் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.

வனப்பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் அதிரடிப்படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதிரடிப்படையினரும் பதிலடி கொடுத்தனர். நள்ளிரவில் தொடங்கிய இந்த துப்பாக்கிச் சண்டை அதிகாலை வரை தொடர்ந்தது. மாவோயிஸ்டுகள் அதிகாலையில் கொல்லப்பட்டனர். இச்சண்டையின்போது அதிரடிப்படையின் மண்டல தளபதி அலோக் யாதவ் உயிரிழந்தார்.

துப்பாக்கிச் சண்டை நடைபெற்ற இடத்திலிருந்து தளபதியின் சடலத்தோடு மூன்று மாவோயிஸ்டுகளின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

ஒரு ஏ.கே. தொடர் தாக்குதல் துப்பாக்கி மற்றும் ஐ.என்.எஸ்.ஏ.எஸ் துப்பாக்கி ஆகியவை சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

கோப்ராவின் 205 வது பட்டாலியன் இந்த துப்பாக்கிச் சண்டைக்கு தலைமை தாங்கியது, அதில் மாநில காவல்துறையினரும் இருந்தனர்.

கோப்ரா கமாண்டோ பட்டாலியன் என்பது ஓர் அதிரடிப்படை ஆகும். இது வனப்பகுதியில் போர்புரிய நியமிக்கப்பட்டுள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ஒரு சிறப்புப் பிரிவு. பெரும்பாலும் மாநிலத்தில் மாவோயிஸ்டு எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு கோப்ரா அதிரடிப்படை பயன்படுத்தப்படுகிறது.

SCROLL FOR NEXT