அசாம் மாநிலம் குவாஹாட்டி அருகே புகழ்பெற்ற காமாக்யா கோயில் அமைந்துள்ளது. நாட்டில் உள்ள 108 சக்தி பீடங்களுள் ஒன்றாக விளங்கும் இந்தக் கோயிலின் குவிமாடத்தை தங்கத் தகடுகளால் வேயும் திட்டத்தை நிறைவேற்றத் தயாராக இருப்பதாக ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, கடந்த ஆண்டு தெரிவித்தார். இதற்கு கோயில் நிர்வாகிகள் ஒப்புதல் வழங்கிய பின்னர் கோயில் குவிமாடத்துக்கு தங்கத் தகடுகள் வேயும் பணி தொடங்கியது.
இதுகுறித்து கோயில் அறக்கட்டளை தலைவர் மோஹித் சந்திர சர்மா கூறும்போது, “19 கிலோ எடையுள்ள தங்கத்தால் தகடுகள் வேயப்பட்டன. பணிகள் நிறைவடைந்ததும் தேவி பூஜை, யாகம், குமாரி பூஜை ஆகியவை நிறைவேற்றப்பட்டு குவிமாடம் திறந்து வைக்கப்பட்டது.
மும்பையிலிருந்து 12 கலைஞர்கள் இங்கு வந்து தங்கியிருந்து இந்தப் பணியை நிறைவு செய்தனர். குவிமாடத்தின் மீது முதலில் தாமிரத் தகடுகள் வேயப்பட்டு பின்னர் தங்கத்தகடுகள் வேயப்பட்டன” என்றார்.
கோயில் மாடத்துக்கு தங்கத்தகடு வேயும் திட்டத்துக்கு முகேஷ் அம்பானியை அழைத்து வந்தவர் அசாம் அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா என்பது குறிப்பிடத்தக்கது.