இந்தியா

ஜார்கண்டில் ஏழை மாணவர்களுக்காக புத்தக வங்கி அமைக்கும் பாஜக எம்.பி: டிசம்பருக்குள் ஒரு லட்சம் நூல்கள் திரட்ட முடிவு

ஆர்.ஷபிமுன்னா

ஜார்கண்ட் மாநிலத் தலைநகரான ராஞ்சியில் அதன் பாஜக எம்.பியான சஞ்சய் சேத் (61), ஏழை மாணவர்களுக்கு புத்தக வங்கி அமைக்கிறார். இதில், வரும் டிசம்பருக்குள் ஒரு லட்சம் நூல்கள் திரட்டவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

மக்களவை தொகுதி எம்.பியான சஞ்சய் சேத்தின் அலுவலகம் ராஞ்சியின் அர்கோரா பகுதியில் அமைந்துள்ளது. இங்கு அமையவிருக்கும் புத்தக வங்கியின் நூல்கள் ஏழை மாணவ, மாணவிகளின் கல்விக்காகப் பயன்பட உள்ளது.

இங்கு நேற்று தொடங்கிய புத்த வங்கியின் முதல் நாளிலேயே சுமார் 400 பாட நூல்கள் பொதுமக்களால் அளிக்கப்பட்டது. இதன் எண்ணிக்கையை வரும் டிசம்பர் மாதத்திற்குள் ஒரு லட்சமாக உயர்த்த எம்.பி.யான சஞ்சய் சேத் திட்டமிட்டுள்ளார்.

இதன்மூலம், ஏழை மாணவர்கள் இலவசமாக பாட நூல்களை பெற்று படித்த பின் திருப்பி அளிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதை தன் ராஞ்சி தொகுதிவாசிகள் மட்டும் அன்றி மற்ற பகுதிகளை சேர்ந்தவர்களும் பயன்படுத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ’இந்து தமிழ் திசை’ இணையத்திடம் சஞ்சய் சேத் கூறும்போது, ‘நான் கிராமப்புறப் பகுதிகளுக்கு செல்லும் போது அங்குள்ள மாணவர்கள் நல்ல திறமை படைத்தும் புத்தகங்கள் வாங்கும் வசதி இன்றி உள்ளனர்.

இதனால், அவர்கள் தம் கல்வியை பாதியில் விடும் நிலையை உள்ளது. இதற்காக, நான் இந்த புத்தகவங்கியை துவக்க முடிவு செய்தேன். இவற்றை படித்து விட்டு தம் கல்வியாண்டு முடிந்த பின் அவர்கள் திருப்பி அளிக்கலாம்.’ எனத் தெரிவித்தார்.

இந்த வங்கிக்கு புத்தகங்களை அளிக்க விரும்புவோருக்காக இலவச தொலைபேசி வசதியும் செய்யப்பட்டுள்ளது. காலை 10.00 மணி முதல் மாலை 5.00 வரையிலான நேரத்தில் 0651-2240060, 2240054 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இங்கு துவக்கப் பள்ளிப் பாடங்கள் முதல் உயர்கல்விக்கான ஆய்வு நூல்கள் வரை கிடைக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே, இப்புத்தக வங்கியானால் பலரும் பயன்பெறும் வாய்ப்புகள் உள்ளன.

SCROLL FOR NEXT