எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, முதல்வர் பினராயி விஜயன் : கோப்புப்படம் 
இந்தியா

கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா மீது விசாரணையை முடுக்கும் பினராயி அரசு: ஆளுநர், சபாநாயகரிடம் அனுமதி கோருகிறது

பிடிஐ

கேரள எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரமேஷ் சென்னிதலா உள்ளிட்ட 2 முன்னாள் அமைச்சர்கள் மீது மதுபான பார் மோசடி தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்பதால், ஆளுநர், சபாநாயகரிடம் கேரள அரசு அனுமதி கோரியுள்ளது.

ஆனால், இது அரசியல்ரீதியான பழிவாங்கும் செயல் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. தங்கக் கடத்தல் வழக்கு, லைப் மிஷன்திட்டம் ஆகியவற்றில் மத்திய அரசின் பல்வேறு விசாரணை அமைப்புகளின் விசாரணை ஆளும் இடதுசாரி அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள சூழலில் வரும் டிசம்பர் 8-ம் தேதி கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுகிறது.

இந்த இக்கட்டான நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மீது மீண்டும் விசாரணையை கேரள அரசு கையிலெடுத்துள்ளது.

கேரளாவில் கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிஆட்சியில் இருந்த போது சுங்கவரித்துறை அமைச்சர் கே.பாபு, சுகாதாரத்துறை அமைச்சர் வி.எஸ்.சிவக்குமார், காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகியோரிடம் மதுபார் உரிமம் பெற லஞ்சம் கொடுத்தேன் என்று மதுபான விற்பனையாளர் பிஜூ ரமேஷ் சமீபத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.

இதையடுத்து, பல்வேறு ஆதாரங்களை ஊழல்தடுப்பு பிரிவினர் திரட்டி, மேற்கொண்டு விசாரணை நடத்து அனுமதி கோரி முதல்வர் பினராயி விஜயனுக்கு கோப்புகளை அனுப்பினர். பினராயி விஜயன் அந்த கோப்புகளை ஆளுநர் ஆரிப் முகமது கான், சபாநாயகர் பி. ஸ்ரீராமகிருஷ்ணன் ஆகியோரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மதுபான பார் மோசடி தொடர்பாக மீண்டும் விசாரிக்கப்பட உள்ளது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறுகையில் “ எந்த விசாரணயையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். 6 ஆண்டுகளுக்கு முன், நான் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது இந்த குற்றச்சாட்டை மறுத்தேன்.

என் கைகள் கறைபடியாதவை. யாரும் எனக்கு லஞ்சம் கொடுக்கவும் இல்லை, நான் வாங்கவும் இல்லை. ஆனால், இந்த செயல் அரசியல்ரீதியான பழிவாங்கல். சங்கர் ரெட்டி, ஜேக்கப் தாமஸ் ஆகிய இரு ஊழல்ஒழிப்புத்துறை இயக்குநர்களும் இந்த வழக்கில் ஆதாரமில்லை எனக் கூறி முடித்துவிட்டனர்.

மத்திய அரசின் பல்வேறு விசாரணை அமைப்புகள் மூலம் நெருக்கடியை ஆளும் இடதுசாரி கூட்டணி சந்தித்து வருகிறது. இதனால் எதிர்க்கட்சிகளை ஆளும் அரசு குறிவைக்கிறது. ஆதாரமில்லாத குற்றச்சாட்டு அடிப்படையில் விசாரணை நடத்துகிறது இடதுசாரி அரசு என ஆளுநருக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன். இந்த விசாரணையை பற்றி எனக்கு பயமில்லை. மகிழ்ச்சியாக விசாரணையை எதிர்கொள்வேன் ” எனத் தெரிவித்தார்.

கேரள மாநில பார் ஹோட்டல் உரிமையாளர்கள் அமைப்பின் தலைவர் பிஜூ ரமேஷ் கூறுகையில் “ காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தபோது கோடிக்கணக்கான பணம் அப்போதிருந்த அமைச்சர்களிடம் வழங்கியிருக்கிறேன் . நான் தொடுத்த வழக்கை வாபஸ் பெறக்கோரி ஜோஸ் கே மாணி என்னிடம் பேரம் பேசினார். ஜோஸ் கே மாணி மீதும் விசாரணை நடக்கிறதா எனத் தெரியவில்லை” எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT