மணிப்பூர் மாநிலத்தில் சனிக்கிழமை காலை அடுத்தடுத்து மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் இன்று காலை அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் உணரப்பட்டன. சேனாபதி பகுதியிலும் உக்ருல் பகுதியிலும் அடுத்தடுத்து இந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
இதுகுறித்து தேசிய நில அதிர்வு மையம் கூறியுள்ளதாவது:
மணிப்பூர் மாநிலத்தில் சேனாபதி பகுதியில் காலை 6.54 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 2.8 ஆகப் பதிவானது. நில அதிர்வு 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து உக்ருல் பகுதியில் இன்று காலை 10.19 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆகப் பதிவாகியுள்ளது. இதன் ஆழம் 30 கிலோ மீட்டர்.
இந்த நிலநடுக்கங்கள் காரணமாக இதுவரை எந்தவிதமான சொத்துக்களும் சேதமடையவில்லை.
இவ்வாறு தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.