இந்தியா

சசிகலா விடுதலையில் சிறப்பு சலுகை வழங்க முடியாது: கர்நாடக உள்துறை அமைச்சர் தகவல்

இரா.வினோத்

சசிகலாவை விடுதலை செய்வதில் சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட மாட்டாது என கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் 2017ம் ஆண்டு முதல் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சசிகலாவும், சுதாகரனும் தங்களுக்கு விதிக்கப்பட்ட ரூ.10கோடியே 10 ஆயிரம் அபராதத்தை செலுத்தியுள்ளனர். இதனால் சசிகலா 2021-ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி விடுதலை செய்யப்பட இருப்பதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது.

இதற்கு சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், ‘‘கர்நாடக சிறைத்துறை விதிமுறையின்படி சசிகலாவுக்கு 129நாட்கள் சலுகை அளிக்க முடியும்.சிறையில் அவர் கன்னடம், யோகாஉள்ளிட்டவை கற்றுத் தேர்ந்துள்ளார். எனவே நன்னடத்தை விதிகளின்படி அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும்’’ என மனு அளித்துள்ளார்.

இதுகுறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மையிடம் கேட்டபோது, ‘‘சசிகலாவிடுதலையில் எந்த சிறப்பு சலுகையும் அளிக்கப்பட மாட்டாது. முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து இப்போது எந்த முடிவும் எடுக்கவில்லை. நீதிமன்ற தீர்ப்புமற்றும் சிறைத்துறை விதிமுறையின்படியே அவரது விடுதலை தேதி முடிவு செய்யப்படும்''என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT