எஸ்சி-எஸ்டி சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முடித்திருத்தம் செய்ததற்காக முடித்திருத்தும் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்ததோடு, சமூகப் புறக்கணிப்பும் செய்துள்ள கொடுமை கர்நாடக மாநிலத்தின் ஒரு கிராமத்தில் நடந்துள்ளது.
ஹல்லாரே, இன்னமும் சாதிப் பாகுபாட்டின் மூலம் மனிதர்களை ஆதிக்கம் செலுத்தும் கிராமம். மைசூரு அருகே நஞ்சன்கோடு தாலுக்காவில் அமைந்துள்ள இக்கிராமத்தில் வசித்துவரும் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த நபர்களுக்கு முடிவெட்டியதற்காக, பிற சமூக மக்களின் பெரும் கோபத்திற்கு ஆளாகியுள்ளனர் முடித்திருத்தும் குடும்பத்தினர்.
முடிதிருத்துநர் மல்லிகார்ஜுன் ஷெட்டி இது தொடர்பாக மைசூருவில் மாவட்ட அதிகாரிகளைச் சந்தித்துப் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து மல்லிகார்ஜுன் ஷெட்டி ஏஎன்ஐயிடம் கூறியதாவது:
''தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த நபர்களுக்கு முடிவெட்டிய ஒரே காரணத்திற்காக எங்கள் குடும்பத்தை கிராமத்தில் உள்ள மற்ற பிரிவு மக்கள் சமூகப் புறக்கணிப்பு செய்துள்ளனர். அதுமட்டுமின்றி ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.
இந்த ஊரில் எங்களுக்கு நடப்பது இது முதல் முறையல்ல. மூன்றாவது முறை. ஏற்கெனவே அவர்கள் அபராதம் விதித்தபோது அதைச் செலுத்தியுள்ளேன்.
எஸ்சி-எஸ்டி சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முடித்திருத்தம் செய்ததற்காக கிராமத்திலுள்ள மற்ற சமூக மக்கள் என்னைச் சித்திரவதை செய்து வருகின்றனர். இதனால் எனது குடும்பம் நிம்மதியை இழந்துள்ளது. மேலும், அதிகாரிகள் செவிசாய்த்து இப்பிரச்சினையை விரைவாகத் தீர்க்காவிட்டால் என் குடும்பத்தினர் தற்கொலை செய்து கொள்ளவேண்டியிருக்கும். இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளேன்''.
இவ்வாறு மல்லிகார்ஜுன் ஷெட்டி தெரிவித்தார்.