உத்தரபிரதேசத்தில் கடந்த 10 ஆண்டுகளாக சுமார் 50 சிறுவர்களை ஏமாற்றி பாலியல் வீடியோ எடுத்துவந்த அரசுப் பொறியாளர் ஒருவரை சிபிஐ கைது செய்துள்ளது.
சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் தடுப்பு என ஒரு புதிய பிரிவு சிபிஐயில் தொடங்கப்பட்டுள்ளது. டெல்லியில் செயல்படும் அப்பிரிவின் சார்பில் இணையதளங்களில் தொடரும் விசாரணையில், உ.பி.யின் பின்தங்கிய மாவட்டங்கள் நிறைந்த புந்தேல்கண்ட் பகுதியிலிருந்து ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இங்குள்ள சித்ரகுட் நகரில் வசிக்கும் உ.பி. நீர்வளத்துறை பொறியாளரான ராம்பவன், கடந்த 10 ஆண்டுகளாக சிறுவர்களை ஏமாற்றி பாலியல் வீடியோ எடுத்து வந்துள்ளார். அவற்றை இந்தியா மற்றும் வெளிநாட்டு இணைய தளங்களில் அவர் பதிவேற்றம் செய்து வந்துள்ளார்.
கடந்த ஒன்றரை மாதங்களாக அவரை கண்காணித்து வந்த சிபிஐ, நேற்று முன்தினம் சித்ரகுட், கார்வி நகர் காலனியில் கைது செய்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் பல முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இவரது மடிக்கணினி மற்றும் பென்டிரைவ்களில் சுமார் 50 சிறுவர்களின் 66 பாலியல் வீடியோக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
புந்தேல்கண்ட் பகுதியின் சித்ரகுட், பாந்தா, ஹமீர்பூர் ஆகியமாவட்டங்களின் கிராமங்களை சேர்ந்த 5 முதல் 16 வயதுள்ள சிறுவர்களை வைத்து பாலியல்வீடியோக்கள் படமாக்கப்பட்டுள் ளன. இதில் 600 புகைப்படங்களும் கிடைத்துள்ளன. ராம்பவனிடம் இருந்து ரூ.8 லட்சம் ரொக்கம் மற்றும் 12 கைப்பேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஏழைக் குடும்பத்து சிறுவர் களை ஏமாற்றி தன் வீட்டுக்கு அழைப்பதை ராம்பவன் வழக்கமாகக் கொண்டுள்ளார். அவர்களை கைப்பேசிகளில் வீடியோவிளையாட வைத்தும், பரிசுகள்கொடுத்தும் நட்பு பாராட்டியுள்ளார். பிறகு அவர்களுக்கு போதைமருந்தும் கொடுத்து தன்வசப்படுத்தி பாலியல் வீடியோக்களை படமாக்கி உள்ளார். உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுடன் இவருக்கு இமெயில் தொடர்பு உள்ளது. இவர்களிடம் பாலியல் வீடியோக்களை ராம்பவன் விற்பனை செய்து வந்தாரா எனவும் விசாரிக்கப்பட்டு வருகிறது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் திருமணமான ராம்பவனுக்கு குழந்தைகள் இல்லை.