கரோனா வைரஸுக்கு எதிரான போரில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவல்துறையினர் அனைவரும் போர் வீரர்களாக மாறிச் செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், கரோனா தடுப்புப் பணியின்போது உயிரிழந்த முன்களப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 89 லட்சத்து 58 ஆயிரத்து 483 ஆக அதிகரித்துள்ளது. இதில் குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 83 லட்சத்து 83 ஆயிரத்து 602 ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் காப்பாற்றும் உன்னதப் பணியில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், போலீஸார் ஆகிய கரோனா முன்களப் பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் கரோனா முன்களப் பணியாளர்கள் பலர் உயிரிழந்தனர். அவர்களைக் கவுரவிக்கும் விதமாக அவர்களின் வாரிசுகளுக்கு மருத்துவப் படிப்புகளில் உள் ஒதுக்கீடு வழங்குவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கை:
''கோவிட் வார்டுகளில் நோயாளிகளைக் காப்பாற்றுவதற்காகவும், கரோனா தடுப்புப் பணியிலும் முன்களப் பணியாளர்கள் பலர் தங்கள் உயிரை இழந்தனர். அவர்களின் வாரிசுகளுக்கு 2020-21ஆம் கல்வியாண்டிற்கான எம்பிபிஎஸ் / பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளில் சேர உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.
தேசிய தேர்வு முகமை நடத்திய நீட் -2020 இல் பெறப்பட்ட தரவரிசை அடிப்படையில் ஆன்லைன் விண்ணப்பத்தின் மூலம் மருத்துவ கவுன்சில் கமிட்டி (எம்.சி.சி) இதற்கான விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுக்கும். மத்திய ஒதுக்கீட்டிலிருந்து எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கப்படும்.
இந்த வகைக்கான தகுதியை உறுதி செய்து மாநில / யூனியன் பிரதேச அரசுகள் சான்றளிக்கும்.
கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், பணியாளர்கள், தன்னார்வர்லர்கள் / உள்ளூர் நகர அமைப்பு ஊழியர்கள் / ஒப்பந்தப் பணியாளர்கள் / தினசரி ஊதியம் பெறும் பணியாளர்கள் / தற்காலிகப் பணியாளர்கள் / மாநில / மத்திய மருத்துவமனைகளின் அவுட்சோர்ஸ் ஊழியர்கள் / மத்திய / மாநில / யூனியன் பிரதேசங்களின் தன்னாட்சி மருத்துவமனைப் பணியாளர்கள் / எய்ம்ஸ் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவன ஊழியர்கள் / மத்திய அமைச்சகங்களின் மருத்துவமனை மருத்துவர்கள், பணியாளர்கள், கோவிட்-19 தொடர்பான பொறுப்புமிக்க பணிகளில் ஈடுபட்ட அனைவரும் முன்களப் பணியாளர்கள் ஆவர்''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.