மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸவர்த்தன் பேட்டி அளித்த காட்சி: படம் | ஏஎன்ஐ. 
இந்தியா

2021-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்; அடுத்த 4 மாதங்களில் கரோனா தடுப்பு மருந்து தயார்: மத்திய அமைச்சர் ஹர்ஸவர்த்தன் உறுதி

பிடிஐ

அடுத்த 3 அல்லது 4 மாதங்களுக்குள் கரோனா தடுப்பு மருந்து தயாராகிவிடும் என்று நான் நம்புகிறேன். 135 கோடி மக்களுக்கும் அறிவியல்ரீதியான மதிப்பீடுகள் அடிப்படையில் தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸவர்த்தன் தெரிவித்தார்.

கரோனா காலம் மற்றும் கரோனாவுக்குப் பிந்தைய காலத்தில் உடல்நலத்தைப் பராமரிப்பது குறித்த எப்ஐசிசிஐ சார்பில் நடத்தப்பட்ட இணையதளக் கருத்தரங்கில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸவர்த்தன் இன்று பங்கேற்றார்.

அவர் பேசியதாவது:

''கரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்து அடுத்த 3 அல்லது 4 மாதங்களில் தயாராகிவிடும் என்று நான் நம்புகிறேன். அறிவியல்ரீதியான புள்ளிவிவரங்கள் அடிப்படையில், முன்னுரிமை அளித்து 135 கோடி மக்களுக்கும் கரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும்.

மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் ஆகியோர் இயல்பாகவே முன்னுரிமைக்குள் வந்துவிடுவார்கள். அதைத் தொடர்ந்து முதியோர், நோயால் பாதிக்கப்பட்டோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

கரோனா தடுப்பூசியைப் பகிர்ந்தளிப்பது தொடர்பாக விரிவான திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. இணையவழியில் கரோனா தடுப்பூசியை எவ்வாறு பகிர்ந்தளிப்பது குறித்த விவாதமும் நடந்து வருகிறது.

மக்களுக்குக் கரோனா தடுப்பூசி கிடைத்தவுடன் அந்த தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் உடல்நலத்தைக் கண்காணித்தல், அவர்களை தொடர்பில் வைத்திருத்தல் அவசியம். ஆதலால் 2021-ம் ஆண்டு அனைவருக்கும் சிறப்பாக இருக்கும்.

கரோனா பரவல் காலத்தில் மத்திய அரசு சில துணிச்சலான முடிவுகளை எடுத்தது. பிரதமர் மோடி ஜனதா ஊரடங்கு கொண்டுவந்து பரிசோதித்து, அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கைக் கொண்டுவந்து கரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவந்தார்.

பிரதமர் மோடியின் முயற்சிக்கு நாடு முழுவதும் மக்கள் ஆதரவு அளித்தார்கள். அதேபோல லாக்டவுன் முடிந்தபின் அன்லாக் நடவடிக்கைகளும், கரோனாவுக்கு எதிராகத் திட்டமிட்டு நடவடிக்கைகள் எடுத்ததை வெளிப்படுத்தியது.

கரோனாவுக்கு எதிரான போரில் அரசு தீவிரமாகச் செயல்பட்டது. விமான நிலையங்கள், துறைமுகம், சாலைப் பகுதி எல்லைகள் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டன. கடந்த 11 மாதங்களில் குறுகிய காலத்தில் கரோனா வைரஸ் பரவலை விரைந்து கட்டுப்படுத்திய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

தொடக்கத்தில் நம்மிடம் பிபிஐ கவச ஆடைகள், வென்டிலேட்டர், என்95 முகக்கவசம் பற்றாக்குறை இருந்தது. ஆனால், அடுத்த சில மாதங்களில் இவற்றை நாம் தயாரித்து நம்முடைய தேவைக்குப் போக ஏற்றுமதி செய்யத் தொடங்கினோம். உலக அளவில் நடக்கும் கரோனா தடுப்பூசிக்கான ஆராய்ச்சிகளோடு ஒப்பிடுகையில் நம்முடைய விஞ்ஞானிகள் சிறப்பாகச் செயல்பட்டு முன்னணியில் இருக்கிறார்கள்.

கரோனாவைக் கட்டுப்படுத்தும் நம்முடைய ஒவ்வொரு முயற்சியும் சிறப்பாக இருக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு பாராட்டியுள்ளது. உலக அளவில் அதிகமான அளவில் கரோனாவிலிருந்து குணமடைந்த சதவீதம், குறைந்த இறப்பு வீதம் இந்தியாவில்தான் இருக்கிறது.

2,115 ஆய்வகங்கள் மூலம் கரோனா பரிசோதனை செய்து வருகிறோம். 20 லட்சம் கரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள் உள்ளன. பிரதமர் மோடி கூறியதைப் போல் 2022இல் இந்தியர்களுக்குப் புதிய இந்தியா கிடைக்கும். இந்தப் புதிய இந்தியாவில் மனிதநேயம், தேசியவாதம் மட்டுமே பிரதமானமாக இருக்கும்''.

இவ்வாறு ஹர்ஸவர்த்தன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT