கோப்புப்படம் 
இந்தியா

மாநில அரசின் அதிகார வரம்புக்குள் சிபிஐ விசாரணை நடத்தும்போது ஒப்புதல் பெறுவது கட்டாயம்: உச்ச நீதிமன்றம் விளக்கம்

பிடிஐ

மாநில அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்ட பகுதிகளில் சிபிஐ விசாரணை நடத்தும்போது மாநில அரசின் ஒப்புதல் கண்டிப்பாகத் தேவை. ஒப்புதல் இல்லாமல் விசாரணை நடத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) டெல்லி சிறப்புக் காவல் நிறுவன (டிஎஸ்பிஇ) சட்டத்தின் கீழ் இயங்குகிறது. எந்த ஒரு மாநிலத்திலும் விசாரணை நடத்துவதற்கு அந்த மாநில அரசின் பொதுவான ஒப்புதல் தேவை. இந்த ஒப்புதல் அவ்வப்போது புதுப்பிக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த 2018-ல் சிபிஐ அமைப்புக்கான பொதுவான ஒப்புதலை மேற்கு வங்க அரசு திரும்பப் பெற்றது. எதிர்க்கட்சியினரைப் பழிவாங்குவதற்காக சிபிஐ அமைப்பு தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டியது.

காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர், கேரளா, ராஜஸ்தான், பஞ்சாப், ஜார்க்கண்ட் அரசுகளும் சிபிஐ அமைப்புக்கான ஒப்புதலை வாபஸ் பெற்றன. இதுபோல, மகாராஷ்டிராவில் சமீபத்தில் எழுந்த தொலைக்காட்சி டிஆர்பி முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்த நிலையில், அம்மாநில அரசும் சிபிஐ அமைப்புக்கான ஒப்புதலை வாபஸ் பெற்றது.

இதன் மூலம் இனிமேல் சிபிஐ அமைப்புகள் மாநிலத்தில் யார் மீதாவது வழக்குப் பதிவு செய்வதென்றால் முறைப்படி மாநில அரசிடம் அனுமதி பெறுவது கட்டாயமாகும்.

இந்தச் சூழலில் சில வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட தனிநபர்கள், தனியார் நிறுவனங்கள், பொதுத்துறை ஊழியர்கள் சிலர் சேர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அதில், ஊழல் வழக்கில் மாநில அரசின் அனுமதி பெறாமல் சிபிஐ எங்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரினர்.

மேலும், கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அலகாபாத் உயர் நீதிமன்றம், பெர்டிகோ மார்க்கெட்டிங் அண்ட் இன்வெஸ்ட் நிறுவனத்தின் வழக்கில் தீர்ப்பளித்திருந்தது. அதில் இந்த வழக்கில் தொடர்புடைய இரு பொதுத்துறை ஊழியர்கள் ஊழல் செய்துள்ளார்கள் என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இருப்பதால் விசாரணையை நடத்தலாம் எனத் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்தும் மேல்முறையீடு செய்திருந்தார்கள்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், பி.ஆர்.காவே ஆகியோர் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அளித்த விளக்கத்தில், “அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள கூட்டாட்சி அம்சங்களுக்கு ஏற்றாற்போல்தான் நடக்கின்றன. அடிப்படைக் கட்டமைப்புகளில் கூட்டாட்சி முக்கியமானது.

டெல்லி சிறப்புக் காவல் நிறுவன (டிஎஸ்பிஇ) சட்டத்தின் 5-வது மற்றும் 6-வது பிரிவுகளை விளக்குகிறோம். பிரிவு 5-ன்படி, சிபிஐ தனது அதிகாரத்தை, அதிகார வரம்பை யூனியன் பிரதேசங்களில் இருந்து ஒரு மாநிலத்துக்கு டிஎஸ்பிஇ சட்டத்தின் கீழ் பிற மாநிலத்தின் மீது செலுத்தலாம்.

ஆனால், அந்தந்த மாநில அரசுகளின் அதிகார வரம்புக்குள் வரும்போது, அவற்றின் ஒப்புதலைக் கட்டாயமாகப் பெறுதல் அவசியம். மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் சிபிஐ தனது விசாரணையைத் தொடங்க முடியாது.

ஆனால், மனுதாரர்கள் வழக்கைப் பொறுத்தவரை உத்தரப் பிரதேச அரசு சிபிஐ விசாரணைக்கு 1989-ம் ஆண்டு டெல்லி சிறப்புக் காவல் நிறுவனச் சட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்த அனுமதி அளித்துள்ளது. ஆதலால், மனுதாரர் மனுவைத் தள்ளுபடி செய்கிறோம்” எனத் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT