இந்தியா

லடாக் எல்லையில் ‘மைக்ரோவேவ்’ ஆயுதங்களை பயன்படுத்துகிறதா சீனா?- இந்திய ராணுவம் திட்டவட்ட மறுப்பு

செய்திப்பிரிவு

கிழக்கு லடாக் எல்லைப் பகுதிக்குள் சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைய முயற்சி செய்து வருகின்றனர். அவர்களை தடுக்கும் பணியில் இந்திய ராணுவ வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.இதனைத் தொடர்ந்து, லடாக்கின் பல்வேறு பகுதிகளில் இந்தியாவும், சீனாவும் தங்கள் ராணுவ வீரர்களை குவித்திருக்கின்றன.

இந்த சூழலில், பிரிட்டனில் இருந்து வெளிவரும் ‘தி டைம்ஸ்’ நாளிதழில் லடாக்கில் இந்திய ராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட மலை முகடுகளில் இருந்து அவர்களை விரட்டியடிக்க ‘மைக்ரோவேவ்’ ஆயுதங்களை சீன ராணுவம் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‘‘லடாக்கில் ‘மைக்ரோவேவ்’ ஆயுதங்களை சீன ராணுவம் பயன்படுத்தி வருவதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது அடிப்படை ஆதாரமற்ற செய்தியாகும். இதில் சிறிதளவும் உண்மை இல்லை’’ என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, சீனா உள்ளிட்ட சில நாடுகள்தான் ‘மைக்ரோவேவ்’ ஆயுதங்களை வைத்திருக்கின்றன. வன்முறை கும்பல்களை கலைப்பதற்கு இவை பயன்படுவதாக கூறப்படுகிறது.

‘எலக்ட்ரோ மேக்னடிக்’ முறையில் செயல்படும் இந்த ஆயுதங்கள், மனிதத் தோலின் அடிப்பகுதியில் இருக்கும் நீர்த் துகள்களை சூடாக்கும். இதனால், கடுமையான உஷ்ணம் உடலை தாக்குவதால் அந்தப் பகுதியில் மக்களால் தொடர்ந்து இருக்க முடியாத சூழல் ஏற்படும். சுமார் 1 கி.மீ. தொலைவு வரையில் உள்ள மக்களை இந்த ஆயுதங்களால் விரட்ட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT